Get Best Only
பாகம் 9
இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். நால்வரும் அவர்முன் நின்று தங்களது ID card-ஐ காண்பித்தனர்.
இன்ஸ்பெக்டர், ’ஏன்யா, உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா, அத்தன பேர் போனாங்களே எதாவது கண்டுபிடிக்க முடிஞ்சதா? ம்.. இப்போ நீங்க போய்தான் கண்டுபிடிக்கப் போறிங்களா? பாதி பேர் பைத்தியமா சுத்தறானுங்க, மீதிபேர் என்ன ஆனாங்கனே தெரியல. ஆமா நீங்க பேட்டி மட்டும் தான எடுக்கப் போறிங்க?’
வினய், ’ஆமா ஸார்’
இன்ஸ்பெக்டர் ரைட்டர் பக்கம் திரும்பி,’ இவங்க போறதுக்கு permission letter ரெடி பண்ணுங்க’ என்றார்.
Permission letter-ல் இன்ஸ்பெக்டர் கையெழுத்திட்டு கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு நால்வரும் வெளியில் வந்தனர். இன்ஸ்பெக்டர் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார். மறுபடி பேருந்து நிலையம் வந்தடைந்தனர் நால்வரும். அங்கே இருந்த எந்த பேருந்திலும் பரதன் தாங்கல் பெயர் இல்லை. ஒரு கண்டக்டரிடம் சென்று விசாரித்தனர்.
வினய், ’ஸார்,பரதன் தாங்கல் போறதுக்கு எதாவது பஸ் இருக்கா?’
கண்டக்டர் நால்வரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு
‘அந்த ஊருக்கு எந்த பஸ்ஸும் போகாது. ஆட்டோ புடிச்சிதான் போகணும். அதுவும் 5 மணி வரைக்கும்தான். பஸ் ஸ்டாண்ட் விட்டு வெளிய போனா நெறய ஆட்டோ நிக்கும், கேட்டு போங்க’ என்றார்.
பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறி ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்தடைந்தனர். மூன்று ஆட்டோக்களே நின்றன.
சுனில் ஒரு ஆட்டோக்காரரிடம் சென்று,
‘ண்ணா, பரதன் தாங்கல் போகணும். ஆட்டோ வருமா?’ என்று கேட்டான்.
‘எத்தன பேரு?’
‘நாலு பேரு’
‘முந்நூறு ரூபா ஆகும். போலாமா?’ என்றார்.
வினய் போகலாம் எனக் கூறினான். நால்வரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டனர். ஆட்டோ புறப்பட்டது. ஊரைத் தாண்டியவுடன் வலது புறம் ஒரு கோட்டை கண்ணில் பட்டது.
சுனில், ‘இதான் அரண்மனையா? மலைக்கு மேல கட்டி வச்சிருக்கானுங்க?’
வினய், ‘இது ராணி கோட்டை. ராஜா கோட்டை இந்தப் பக்கம் இருக்கு பாரு’ என்று கூறி இடது பக்கம் கை காட்டினான்.
அந்தக் கோட்டையும் மலைக்குமேல் தான் இருந்தது. அதற்கு சற்று தூரத்தில் கீழே எதோ நீளமான சுவரும், அதன் முடிவில் வட்ட வடிவில் சுற்றுச் சுவர் போலவும் இருந்தது.
ரத்தன், ‘அது என்ன?’
வினய், ‘அதெல்லாம் சுரங்கம்’ என பதிலளித்தான்.
‘சுரங்கமா? எங்க போறதுக்கு?’
‘......................’
ஆட்டோகாரர், ‘அது இங்கிருந்து பெங்களூரு வரைக்கும் போகும். நாலு குதிரைங்க வரிசையா போலாம். அவ்ளோ பெருசு’
ஆட்டோ சில கிலோமீட்டர்கள் பயணித்திருந்தது. வலது புறத்தில் சுமாராக ஒரு கிலோமீட்டர்கள் இருக்கலாம். ஒரு பெரிய மலை தெரிந்தது. அனைவரின் பார்வையும் அதன் மேலேயே இருந்தது. பெரிய மலை. ஆனால் ஒன்றல்ல, இரண்டு. காடு ஆரம்பித்தது. மலை மறைந்து போனது.. இருபுறமும் காடு. அடர்ந்த காடு. பகல்வேளையிலும் கும்மிருட்டாக காட்சியளித்தது உட்புறம் நெருக்கமான மரங்கள், அடர்த்தியான கிளைகள், இலைகள் என திகிலூட்டுகிறது.
ரத்தன் ஆட்டோக்காரரிடம், ’இன்னும் எத்தன கிலோமீட்டர் போகணும்ணா?’
‘நாலு கிலோமீட்டர் போனா ஊர் வந்துடும்’ என்றார்.
ஒரு பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. ஆறு குறுக்காக சென்று கொண்டிருந்தது. ஆறு முழுவதும் நீர் ஓடிக் கொண்டிருந்தது.
ரத்தன் ஆட்டோக்காரரிடம், ‘இந்த ஆறு பேரு என்னணா?’
‘வராக நதி’
ஆட்டோ ஒருவழியாக ஊருக்குள் செல்லும் பாதையைத் தொட்டிருந்தது. வண்டியை நிப்பாட்டினார்.
ஆட்டோக்காரர் இவர்களைப் பார்த்து ‘இங்கயே இறங்கிக்கோங்க. உள்ள போகாது. ரொம்ப தூரமில்ல. அஞ்சி நிமிஷம் நடந்தா ஊர் வந்துடும்’ என்றார்.
நால்வரும் இறங்கிக் கொண்டனர். வினய் ஆட்டோவிற்கு காசு கொடுத்து அனுப்பிவைத்தான்.
“பரதன் தாங்கல் உங்களை அன்புடன் வரவேற்கிறது” பெயர்ப் பலகை வரவேற்கிறது. பாழடைந்து கிடந்தது. ஊருக்குள் நுழைந்தனர். குக்கிராமத்தை முதன்முதலில் பார்க்கிறார்கள்.இடிந்து விழுந்த சுவர்கள், கூரை இல்லாத வீடுகள் இடையிடயே வாழ்ந்துகொண்டிருக்கும் வீடுகள். ஆங்காங்கே ஓட்டு வீடுகள். சிமெண்ட் வீடுகள் ஒன்றுகூட இல்லை. ஊரின் முக்கூட்டை அடைந்தனர். முக்கூட்டில் இருந்த அம்மன் சிலை திரையிட்டு மூடப்பட்டிருந்தது. வினய், சுனில், ரத்தன் மூவரும் ஊரைப் பார்த்துக் கொண்டிருக்க, ரேஷ்மா சிலையை சுற்றி வந்து அம்மன் சிலையைப் பார்த்தாள். அதிர்ந்தாள். அம்மன் சிலையின் கால் உடைக்கப்பட்டிருந்தது. மூவரையும் அழைத்தாள். அவர்களும் அதிர்ந்து போயினர். காரணம் புரியாமல் நால்வரும் திகைத்துப்போய் நின்றனர். ஆச்சர்யத்துடன் அங்கிருந்து நகர்ந்து பழைய இடத்துக்கு வந்து நின்றனர்.