Get Best Only
பாகம் 10
“பரதன் தாங்கல் உங்களை அன்புடன் வரவேற்கிறது” பெயர்ப் பலகை வரவேற்கிறது. பாழடைந்து கிடந்தது. ஊருக்குள் நுழைந்தனர். குக்கிராமத்தை முதன்முதலில் பார்க்கிறார்கள்.இடிந்து விழுந்த சுவர்கள், கூரை இல்லாத வீடுகள் இடையிடயே வாழ்ந்துகொண்டிருக்கும் வீடுகள். ஆங்காங்கே ஓட்டு வீடுகள். சிமெண்ட் வீடுகள் ஒன்றுகூட இல்லை. ஊரின் முக்கூட்டை அடைந்தனர். முக்கூட்டில் இருந்த அம்மன் சிலை திரையிட்டு மூடப்பட்டிருந்தது. வினய், சுனில், ரத்தன் மூவரும் ஊரைப் பார்த்துக் கொண்டிருக்க, ரேஷ்மா சிலையை சுற்றி வந்து அம்மன் சிலையைப் பார்த்தாள். அதிர்ந்தாள். அம்மன் சிலையின் கால் உடைக்கப்பட்டிருந்தது. மூவரையும் அழைத்தாள். அவர்களும் அதிர்ந்து போயினர். காரணம் புரியாமல் நால்வரும் திகைத்துப்போய் நின்றனர். ஆச்சர்யத்துடன் அங்கிருந்து நகர்ந்து பழைய இடத்துக்கு வந்து நின்றனர்.
யாரிடமாவது விசாரிக்கலாம் என்றால் யாரும் கண்ணில் படவில்லை. ஆட்டோ வந்து செல்வதைக் கண்ட பெரியவர் ஒருவர் இவர்கள் பின்னாலேயே நடந்து வந்துகொண்டிருந்ததை இவர்கள் கவனிக்கவில்லை. மெதுவாக இவர்கள் அருகில் வந்தார் அவர்.
நால்வரையும் பார்த்து,’ தம்பி, ஆராய்ச்சி பண்ண வந்தீங்களா? எங்கிருந்து வந்திங்களோ அங்கயே போயிருங்க ஊருக்குள்ள யார் புதுசா வந்தாலும் அதுங்களுக்கு புடிக்காது. போயிருங்கப்பா’ என்று சொல்லிவிட்டு அவர் திரும்பி நடந்து சென்றுவிட்டார்.
வந்து இறங்கியவுடன் போகச் செல்கிறார்களே என்று நால்வரும் திகைத்துப்போய் நின்றனர். அந்த பெரியவரைத் தாண்டி ஒரு சைக்கிள் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. நால்வரும் சென்று சைக்கிள்காரரை வழிமறித்து நிறுத்தினார்.
‘அவரிடம், ’தலைவர் வீடு எதுங்க?’
‘இந்த ஊர்ல தலைவர்னு யாரும் இல்லிங்க;முன்னாடி இருந்தவங்க எல்லாம் ஊரை விட்டு போய்ட்டாங்க. நீங்க அந்தா தெரியுதில்ல ஓட்டு வீடு அங்க போய் கேளுங்க’ என்று ஒரு வீட்டைக் காட்டினார். காட்டிவிட்டு அவர் வேகமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு சென்றுவிட்டார். அவர் காட்டிய வீடு புதிதாக பெயிண்ட் அடித்து ஜொலித்தது. வெளியே போட்ட கோலம் கூட கலையாமல் அப்படியே இருந்தது. இருபக்க கதவு. அருகில் சென்று கதவைத் தட்டினர். யாரும் வரவில்லை. மறுபடியும் தட்டினர். ஒரு பெண் வந்தார். வயது முப்பத்தைந்து இருக்கும். அனைவரையும் பார்த்தபடி, சொல்லுங்க’ என்றார்.
வினய், ‘நாங்க தின ஏடு-ங்கிற பத்திரிக்கைல இருந்து வர்றோம். உங்க ஊரப்பத்தி ஒரு ஆர்டிக்கல் பண்ணப்போறோம். ரெண்டு நாள் தங்கி இந்த ஊர்ல இருக்குறவங்கள பத்தியும், ஊரப்பத்தியும் பேட்டி, வீடியோ எடுக்கணும். உங்க வீட்ல கேட்க சொன்னாங்க’ என்றான்.
‘கொஞ்சம் இருங்க, எங்க வீட்டுக்காரர கூப்பிட்றேன்’ என்று கூறிவிட்டு உள்ளே சென்றார் அந்தப்பெண்.
இரண்டொரு நிமிடங்கள் கழித்து உள்ளே இருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். கம்பீரமான தோற்றம். தலைமுடி சிறிது நரைத்திருந்தது. கலையான முகவெட்டு. மாநிறம்.
அவர்,’ சொல்லுங்க தம்பி, எந்த பத்திரிக்கை?’
தின ஏடு என்று ID Card ஐ காண்பித்தனர்.
‘நான் என்ன ID Proof ஆ கேட்டேன். அதெல்லாம் உள்ள வைங்க. ஆமா, எத்தன நாள் தங்குறதா உத்தேசம்?’
வினய், ’ரெண்டு நாள் தங்கப்போறோம், நீங்கதான் எங்களுக்கு வீடு ஏதாச்சும் ஏற்பாடு பண்ணித் தரணும். ஊர்ல முக்கியமானவர் நீங்கதான்னு சொன்னாங்க. நாங்க இங்கிருந்து கிளம்புர வரைக்கும் உங்க பாதுகாப்பு வேணும் சார்’
‘பாதுகாப்பா? ஹ்ம், இங்க இருக்குறவங்களையே பாத்துக்க முடியல. இதுல உங்கள எங்க?! ஆனா ஒண்ணு, நீங்க எங்க ஊருக்கு வந்துட்டீங்க. இனி நாங்க பாத்துக்குவோம். இந்த ஊரப்பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். சூதானமா நடந்துக்க வேண்டியது உங்க பொறுப்பு’
‘நாங்க உங்க கட்டுப்பாட்லயே இருக்கோம்’
‘என் கட்டுப்பாட்ல இருக்கணும்கிற அவசியமில்ல. ஊர் கட்டுப்பாட்ட மீறாம இருந்தா போதும். சரியா? ராத்திரி ஆறு மணிக்கு மேல வெளிய வரக்கூடாதுன்னே தனித்தனியா வீட்டுக்குள்ளயே கக்கூஸ் ரூம் கட்டி விட்ருக்கோம்னா பாத்துக்கயேன். டவுன்லயே எல்லார் வீட்லயும் கக்கூஸ் ரூம் இருக்காது. ஆனா இந்த ஊர்ல எல்லார் வீட்லயும் கக்கூஸ் இருக்குது.இதுலயே தெரிஞ்சிக்க இந்த ஊரப்பத்தி. சரியா ஆறு மணிக்கு மேல வீட்டோட கதவ உள்பக்கமா பூட்டிக்கிடுங்க. காலைல ஆறு மணில இருந்து ராத்திரி ஆறு மணி வரைக்கும் உங்களுக்கு எதுவும் ஆகாம நாங்க பாத்துக்குவோம். ராத்திரி ஆறு மணில இருந்து காலைல ஆறு மணி வரைக்கும் என்ன நடந்தாலும் அதுக்கு நீங்களேதான் பொறுப்பு. அதுமட்டுமில்ல நீங்க கத்துனாலும் கதறுனாலும் ஒரு பய வெளில வரமாட்டான். Including me. புரிஞ்சிதா?’ எனக்கேட்டு ஒரு வீட்டின்முன் நிப்பாட்டினார்.
‘தம்பி, இதுதான் உங்க வீடு. இந்த ரெண்டு நாளைக்கு மட்டும்தான். அப்புறம் இன்னொரு விஷயம். வழியில யாராவது இந்த ஊரப்பத்தி எதுனா சொல்லியிருந்தா அத அப்படியே நம்புங்க. ஏன்னா அத்தனையும் நெஜம். அப்புறம் இந்த வீடு ரொம்ப ராசியான வீடு. இதுக்கு முன்னாடி வரைக்கும் இந்த ஊருக்கு வர்றவங்களையெல்லாம் மூணாவது தெருவுல இருக்குற வீட்லதான் தங்க வச்சோம். ஆனா எல்லாரும் அடுத்த நாள் உயிரோட இருக்க மாட்றாங்க. அப்புறம் இந்த வீட்டுக்கு மாத்திட்டோம்’
ரத்தன், ’அப்டினா இப்ப யாரும் சாகுறது இல்லயா?’
‘செத்தாங்க, ஆனா ratio கம்மி ஆயிடிச்சி’ சொல்லிவிட்டு கிளம்பினார் அவர்.
பீதியின் உச்சத்தில் இருந்தனர் இவர்கள்.