Get Best Only
பாகம் 32
காட்டில் –
வினய் விழித்திருந்தான். அதிக நேரம் தூங்கிவிட்டோமோ என பதறினான். களைப்பு களைந்திருந்தது. சுறுசுறுப்பாக உணர்ந்தான். பாக்கெட்டில் இருந்த கைக்கடிகாரத்தை எடுத்து மணி பார்த்தான். மணி 2:50 காட்டியது. மறுபடி பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான். சோம்பல் முறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். கண்ணில் மரங்கள் மட்டுமே பட்டன. பாதை கொஞ்சம் வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்தது. கொஞ்சம் வேகமெடுத்து நடக்கலானான். இருண்ட காடு. வெளிச்சம் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. தூரத்தில் வெட்டவெளி தெரிந்தது. அதைத் தாண்டியும் மரங்கள் இருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. வினய் அந்த சமவெளியைத் தொட்டிருந்தான். சற்று பரந்த வெளி. எதிரில் இருந்த காட்டைப் பார்த்தான். மரங்கள் நன்கு ஓங்கி வளர்ந்திருந்தன. காட்டுக்குள் சென்ற பாதையில் நடந்தான். இந்த பாதைகளை யார் பயன்படுத்தி இருப்பார்கள். ஊர்மக்கள் இவ்வளவு தூரம் வருவதற்கான இவ்வளவு தூரம் வருவதற்கான வாய்ப்போ தேவையோ இல்லை. வினய் யோசித்தவாறே வேகமெடுத்து நடந்தான். காட்டின் எல்லைக்கு வந்தான். இந்த எல்லையில் அவன் கண்ணில் பட்டது ஒரு வெள்ளைக்கல் மலை. ஆம். இரண்டாவதாக பார்த்தது போலவே பிரம்மாண்டமாய் இருந்தது. வினய்க்கு கோபம் கோபமாய் வந்தது. கீழே கிடந்த கற்களை எடுத்து மலையை நோக்கி அடித்தான். கோபம் தீராதவனாய் மலையைப் பார்த்து,
‘உனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்டி பண்றீங்க? எங்கிட்ட இருந்து என்னதான் வேணும் உங்களுக்கு? என் அப்பாவையும் எடுத்துக்கிட்டீங்க, இப்போ என் ஃப்ரண்ட்ஸையும் எடுத்துக்கிட்டீங்க. ஆனா என்னை உங்களால எதுவும் பண்ண முடியாது. நான் எதுக்கும் துணிஞ்சவன்’ என்று கத்திவிட்டு மலையைச் சுற்றி இடப்பக்கமாகச் சென்ற பாதையில் வேகமாக ஓடினான். எங்கும் நிற்கவில்லை. ஓடிக்கொண்டிருந்தான். மரங்கள் இல்லை, வெட்டவெளியாக இருந்தது. பாதை சற்று தூரத்தில் இருந்த காட்டுக்குள் சென்றது. வினய் ஓட்டத்தை நிறுத்தவில்லை. சிறிய காடுதான். அதையும் ஓடுயே கடந்தான். காட்டின் எல்லை மற்றொரு பாதையில் சென்று இணைந்தது. வினய் நின்றான். பாதையைப் பார்த்தான். இவனது காலடித்தடம், அருகில் இன்னொரு காலடித்தடம், வண்டித்தடம் இருந்தன. காலையில் இவன் நடந்த அதே பாதை. முன்னோக்கி ஓடினான். காலையில் பார்த்த அந்த மலை இவனை மறுபடி வரவேற்றது. ஓடிச்சென்று அந்த தண்ணீர் குட்டையின் அருகில் அமர்ந்தான். நீரை அள்ளி அள்ளிப் பருகினான். பின்னால் திரும்பிப் பார்த்தான். காலடித்தடமும், வண்டித்தடமும் அதோடு முடிந்து போயிருந்தது. வினய் திரும்பி தலையைக் குனிந்து அழ ஆரம்பித்தான்.
திடீரென்று பின்னால் இருந்து ஒரு கை வினய்யின் தோளைத் தொட்டது. திடுக்கிட்டு எழுந்து விழுந்தான். யார் என்று பார்த்தவனுக்கு ஒரு நொடி உயிர் பிரிந்து வந்ததைப் போல் இருந்தது. அது சுனில். இவன் கண்ணை இவனாலேயே நம்ப முடியவில்லை.
‘சுனில், சுனில்... சுனில், உனக்கு ஒண்ணும் ஆகலியா? நீ செத்துட்டனு நெனைச்சேன்’ ஓடிவந்து கட்டிக்கொண்டான்.
‘என்னடா ஆச்சு? எப்டி.. எப்டி அந்த குழியில இருந்து வெளிய வந்த?’
சுனில் தொடர்ந்தான்.
‘நேத்து நாம அந்த புதைகுழில விழுந்ததும் நான் நல்லா ஆழத்துக்கு போய்ட்டேன். ஆனா அது ரொம்ப ஆழமா இல்ல. அதுக்கு அடியில ரெண்டு, மூணு பொணம் இருந்துச்சி.. அதனால அப்டியே மூச்சு புடிச்சிகிட்டு மெல்ல முன்னாடி வந்து தரையைத் தொட்டேன். அப்டியே மெல்லமா தரையை விரலால் புடிச்ச மாதிரி ஏறி மேல வந்துட்டேன். ஆனா நீ அங்க இல்ல. எனக்குத் தெரியும் நீ அந்த புதைகுழி உள்ள இல்லனு. ஊருக்குள்ள போகவும் மனசில்ல. நீ எந்த வழி போயிருப்பனு தெரியாததால அங்கயே இருந்துட்டேன். பாதைய விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் படுத்துகிட்டேன். காலைல எழுந்து பார்த்தப்போ இன்னொருத்தனும் அந்த ஆத்துவழியில செத்துக்கெடந்தான். அவனுக்குப் பக்கத்துல ஒரு காலடித்தடம். அது உன்னோடதாதான் இருக்கும்னு அதையே ஃபாலோ பண்ணி வந்தேன். ஆத்து வழியோட கடைசியில ஒரு பாலம் இருந்துச்சி. அத தாண்டி இந்தப் பக்கம் வந்தேன். ஒரே வழி. நேரா இங்க வந்தேன். இதுக்கப்புறம் எந்த பக்கம் போறதுன்னு தெரியாம இங்கயே இருந்துட்டேன். ஆனா இப்போ ரேஷ்மாவையும், ரத்தனையும் வச்சிருக்குற இடத்துக்கு போற வழி எனக்கு தெரியும்’
‘தெரியுமா? எப்படி?’
‘என் கூட வா’ என்று கூறி சுனில் முன்செல்ல வினய் பின்சென்றான். சுனில் மலை மீது ஏறினான். வினய்யும் ஏறினான். சற்று உயரத்தில் சென்று நின்றனர்.
No comments:
Post a Comment