Get Best Only
பாகம் 31
வினய் நடந்து வந்த பாதை சற்று நீளமானதாகவே இருந்தது. அவனுக்கு இளைப்பாற சற்று நேரம் தேவைப்பட்டது. ஒரு இடத்தில் அமர்ந்தான். சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. நடந்து வந்த பாதையைப் பார்த்தான். ஒரு இடத்திலும் சக்கரங்களின் தடமோ, குதிரைகளின் காலடிச் சுவடோ, சாணமோ இல்லை. பாதையும் வண்டிகள் செல்வதற்கு சாத்தியப்படாதவை. ஆங்காங்கே பெரிய, பெரிய கற்கள். அதனூடே நடந்து வந்த ஞாபகங்கள். இவைகளை கடந்து வண்டிகள் செல்வது சாத்தியமற்றது என்பதை விளக்கின. இவன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். முன்செல்வதைத் தவிர வேறு யோசனை அவனுக்குத் தோன்றவில்லை. எழுந்து நடந்தான். சற்று வேகமாக நடந்தான். பாதை சற்று இறுக்கமாகச் சென்றது. சிறிது தூரம் வரை காடு அடர்ந்து காணப்பட்டது. வெளிச்சம் குறைவாக இருந்தது. உச்சி வேளையிலும் இருளாக இருந்தது. அந்த அளவிற்கு மரங்கள் நெருக்கமாக அமைந்திருந்தன. இன்னும் கொஞ்சம் வேகமெடுத்து நடந்தான். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. நடந்து அந்த இடத்தை அடைந்தான். வெட்டவெளியாக இருந்தது. பாதை நேராக மரங்களினூடே சென்றது. வினய் நடந்தான். இந்தப் பாதை ஒத்தையடிப் பாதையாக இருந்தது. பாதை உபயோகப்படுத்தி பல வருடங்கள் ஆகியிருக்கும் போல இருந்தது. மரங்கள் மிகவும் அடர்ந்து இருந்தது. மிகவும் இருளாக இருந்தது. ஒரு இனம் புரியாத வினய்யை தொற்றிகொண்டது. யாரும் இல்லாத அடர்ந்த காடு. ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறையாத ஆதவனையே மறைக்கும் காடு. இருள் சூழ்ந்திருந்தது. வினய் ஓட ஆரம்பித்தான். தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பது தெளிவாகப் புரிந்தது வினய்க்கு. தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. ஒரு மேடும் தெரிந்தது. ஓடி வந்து அந்த மேட்டின் மேல் நின்று மூச்சு வாங்கிக்கொண்டான். அந்தப் பக்கமும் மேடு இருந்தது. ஆறு போல காட்சியளித்தது. ஆனால் தண்ணீர் இல்லை. நிமிர்ந்தான். நிமிர்ந்தவனுக்கு அதிர்ச்சி. மலை, முன் பார்த்தது போன்ற மலை. இது கொஞ்சம் பெரிது. உச்சியில் அதே போன்று வெள்ளைக் கற்கள். ஆற்றைக் கடந்து மலையின் அருகில் சென்றான். மலையைச் சுற்றிச் செல்ல பாதையும் இருந்தது. வினய் ‘தொப்’பென்று உட்கார்ந்தான். மலையைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அழுதுவிடலாம் போல் இருந்தது. தன் தந்தைக்கு ஆனது போல் ரேஷ்மாவுக்கும் ஆகிவிட்டால் என்ன செய்வது என எண்ணி கவலையுற்றான். அப்படி எதுவும் நடப்பதற்கு முன்னால் ரேஷ்மாவையும் ரத்தனையும் காப்பாற்றி விட வேண்டும் என எண்ணிக்கொண்டான். எழுந்தான். மலையை சுற்றி செல்ல இருந்த பாதையின் வழியே சென்றான். அந்தப் பாதையும் மலையைச் சுற்றி இடதுபக்கமாக சென்றது. வினய் தொடர்ந்து நடந்தான். மலையின் இடப்பக்கம் முழுவதும் மரங்கள். அடர்ந்த காடு. நடந்தான். ஓடினான். நடந்தான். உட்கார்ந்தான். நடந்தான். ஓடினான். நிறைய தூரம் கடந்திருந்தான். களைப்புற்றிருந்தான். அமர்ந்தான். பசியும் சேர்ந்து கொண்டது. சுற்றிலும் மரங்கள். வினய்க்கு பசியைப் போக்க ஒரு யோசனை தோன்றியது. பட்டென எழுந்தான். கத்தியை வெளியே எடுத்தான். ஒரு மரத்தின் அருகில் சென்றான். அதன் மேல் தோலை உரித்தான். உள்ளே இருந்த வெள்ளைத் தோல் எதிர்பார்த்ததை விட பருமனாக இருந்தது. வெட்டி எடுத்தான். கடித்துச் சாப்பிட்டான். வெயில் படாமல் இருந்ததால் ஈரப்பதத்துடன் சுவையாக இருந்தது. தேவைக்கு அதிகமாகச் சாப்பிட்டான். வயிறு நிரம்பியது. அமர்ந்தான். பசி நீங்கியது. களைப்பு மட்டும் ஈதமிருந்தது. ஒரு மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்தான். ரேஷ்மாவையும், ரத்தனையும் எண்ணிக் கொண்டான். சுனிலை எண்ணியும் கவலை கொண்டான். களைப்பு கண்களை சொருகியது. உறங்கிப் போனான்.
அங்கே –
ரத்தன் மற்றவர்களுடன் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது இரண்டு குதிரை வண்டிகளில் ஆட்கள் வந்தனர். கீழே இறங்கி அந்த மூவரிடமும் சென்றனர். அதில் ஒருவனின் காதில் ஒருவன் ஏதோ முணுமுணுத்தான். அதைக் கேட்டவுடன் அவன் ஒரு நொடி பார்வையை ரத்தன் பக்கம் திருப்பினான். மறுபடி திரும்பி மற்ற இருவரிடமும் ஏதோ கூறினான். வண்டியில் வந்தவர்களிடம் ஏதோ கூறிக்கொண்டிருந்தான். உடனே கூட்டத்தின் பின்னே வந்த நால்வரில் இருவரை அழைத்து அவர்களிடம் ஏதோ கூறினான். அங்கே நடப்பதை ரத்தன் கவனித்துக் கொண்டிருந்தான். அந்த இருவரும் வந்தவர்களுடன் சேர்ந்து குதிரைவண்டியில் ஏறினர். வண்டி புறப்பட்டது. ரத்தனுக்கு எதைப் பற்றி பேசினார்கள் என்று லேசாகப் புலப்பட்டது.
No comments:
Post a Comment