Get Best Only
பாகம் 30
அங்கே –
ரேஷ்மா சும்மாக்காச்சும் குளித்தவாறு காண்பிப்பதற்காக இரண்டு குவளை நீரை அள்ளி உடம்பில் ஊற்றிக்கொண்டாள். அங்கே இருந்த துணியை எடுத்து உடம்பை துடைத்துக்கொண்டு தன் உடுப்புகளை போட்டுக்கொண்டு வெளியில் வந்தாள். அந்த அறைக்குள் நுழைந்தாள். இவள் மெதுவாக வருவதைப் பார்த்த அந்த கண்காணிப்புப் பெண்,
‘சீக்கிரம் வாடி, இங்கென்ன பொண்ணழைப்பா நடக்குது. வந்து இங்க உட்காரு. அவங்க என்ன பண்றாங்கனு பாத்து கத்துக்க’ என்று சொன்னாள். சொல்லிவிட்டு அடுத்த பெண்ணின் பக்கம் பார்வையை திருப்பினாள். ரேஷ்மா மெல்ல வந்து ஒரு பெண்ணின் பக்கத்தில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்தாள். ஆனால் வேலையையோ , அங்கிருந்த பெண்களையோ அவள் பார்க்கவே இல்லை. அருகிலிருந்த பெண் ரேஷ்மாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்.
‘ஏம்மா, செய்யுற வேலைய பாரும்மா; இன்னும் ரெண்டு நாள்ல இந்த வேலையெல்லாம் நீ தனியா செய்யணும்.’
‘.............’
‘என்ன நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன், ஒண்ணுமே சொல்ல மாட்ற. தமிழ் புரியும்ல?’
ரேஷ்மா ஒருமுறை அவளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.
ரேஷ்மா, ‘ரெண்டு நாளுக்கு மேல இருக்குறவங்கதான இதயெல்லாம் கத்துக்கணும். அப்போ எனக்கு தேவைப்படாது’
‘ம், தேவைப்படாதா? பகல் கனவு காணாத. உன்னால இங்கிருந்து போக முடியாது’
“நடக்கும்போது தெரியும்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் ரேஷ்மா.
அந்தக் கண்காணிப்புப் பெண் அங்கிருந்த பெண்களை அதட்டியபடியே அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் நடந்துகொண்டிருந்தாள். அந்த அறை நீல்செவ்வக வடிவில் இருந்தது. சுவரில் இருந்த ஓட்டையின் வழியே செதுக்கப்பட்ட சந்தனக்கட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. பெண்கள் சுவரின் பக்கமாக அமர்ந்து இயந்திரத்தில் சந்தனக கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி சோப் அளவிற்கு செய்து கொண்டிருந்தனர். ரேஷ்மா அமர்ந்திருந்த இடத்திற்கு நேர்பின்னே இரு பெண்கள் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இயந்திரத்தில் ‘டடக், டடக், டடக்’ கென்று சற்று அதிகமான இரைச்சலோடு சத்தம் வந்துகொண்டிருந்தது. அந்தக் கண்காணிப்புப் பெண் அவர்களிடம் திரும்பி,
‘ஏய்! அதுக்கு ஆயில் ஊத்துங்களேன்டி, நான் சொன்னாதான் செய்யணுமா?’
அவர்கள் ஒன்றும் பேசவில்லை.
‘என்ன? ஆயில் கேன் அங்க இல்லயா?’
ஆம் என்பது போல் தலையாட்டினர் அவர்கள்.
அந்தப் பெண் சுற்றிலும் பார்த்தாள். ஆயில் கேன் ரேஷ்மா அமர்ந்திருந்த மேசையில் இருந்தது.
‘ஏய்! இந்தாப்பொண்ணு’
ரேஷ்மாவின் அருகில் இருந்த பெண் அவளது தோளைத்தட்டினாள். உடனே சுயநினைவுக்கு வந்தவளாய் கண்காணிப்புபெண்ணை திரும்பிப் பார்த்தாள்.
‘அந்த ஆயில் கேனை எடுத்து வந்து இங்க குடு’ என்றால். ரேஷ்மா எழுந்து அந்த ஆயில் கேனை எடுத்துக் கொண்டு நேராக அவர்களிடம் கொடுக்க நடந்தாள். நான்கைந்து அடி எடுத்து வைத்திருப்பாள். சட்டென யாரோ பின்னிருந்து இழுத்தனர். திரும்பினாள். அவல் அருகில் அமர்ந்திருந்த பெண். அங்கிருந்த அனைவரும் வேலையை விட்டுவிட்டு இவர்களைப் பார்த்தனர். அந்தக் கண்காணிப்புப் பெண்ணோ சற்று கோபமுற்றவளாய், ரேஷ்மாவிடம்,
ஏண்டி அறிவுகெட்டவளே! கீழ என்ன இருக்கு, ஏது இருக்குனு பாக்க மாட்டியா?’ என்று அவள் தலையைப் பிடித்து கீழே காட்டினாள். தரையில் இரும்பு கம்பிகள் இருந்தன. அதாவது கிரில் போன்று அமைக்கப்பட்டு கீழே ஒரு அறை இருப்பது போன்று தெரிந்தது,. சற்று உற்றுப் பார்த்தாள். அதற்குள்ளே யாரோ ஒரு ஆள் இருப்பது தெரிந்தது. ஆனால் சற்று கோரமாய் இருந்தான். கொஞ்சம் பிரம்மாண்டமாய். கண்காணிப்புப் பெண் ரேஷ்மாவின் தலையில் இருந்து கையை எடுத்துவிட்டு,
நீ பாட்டுக்கு நேரா போறியே, உன் கால்விரலு கொஞ்சம் அது உள்ள போயிருந்தா கூட கறின்னு நெனச்சி கடிச்சி தின்னிருப்பான்டி அவன்’. ரேஷ்மாவுக்கு பக்கென்றது. ‘சுத்திக்கினு போ, வந்து வாய்க்குதுங்க பாரு’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
‘எல்லாரும் வேலைய பாருங்கடி’
ரேஷ்மா அந்த கம்பியின் அருகில் செல்லாதவாறு சுத்திக்கொண்டு போய் ஆயில் கேனை அவர்களிடம் கொடுத்துவிட்டு கவனமாக திருபி வந்து பழைய இடத்தில் அமர்ந்துகொண்டாள்.
No comments:
Post a Comment