Get Best Only
பாகம் 26
கழிவறை பன்னிக்கூடாரம் போல் இருந்தது. அங்கே கால் வைக்கக்கூட அவளுக்கு ஒப்பவில்லை. அழுகையே வந்துவிட்டது. இரு கைகளாலும் வாயைப் பொத்தியவாறு அழ ஆரம்பித்தாள். கண்களில் நீர் ததும்பியது. உண்மையான வலியினை உணர்ந்தாள். இதற்கு கொன்னே போட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது அவளுக்கு. சிறிது நேரத்தில் உள்ளே இவளைக் கூட்டி வந்த பெண் யாரையோ அதட்டினாள். அந்தச் சத்தம் இவளுக்கு கேட்கவே பயத்தில் கண்களை துடைத்துக்கொண்டு அவள் கண்ணில் படாதவாறு சற்று உள்ளே தள்ளி நின்றுகொண்டாள். மறுபடி அழுதாள். சிறிதுநேரம் அழுதவள் அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டாள். அழுவதை நிறுத்தவில்லை. உள்ளிருக்கும் அந்தப் பெண் யாரிடமோ சத்தம் போட்டுக்கொண்டிருந்தாள். அந்தச் சத்தம் அவள் கழிவறையை நோக்கி வருவதை உணர்த்தியது. சுதாகரித்துக்கொண்ட ரேஷ்மா அப்படியே உட்கார்ந்து அருகிலிருந்த தொட்டியில் இருந்த தண்ணீரை அள்ளி முகம் கழுவுவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்தாள். அந்தப் பெண் கழிவறையை எட்டிப் பார்த்தாள். இவள் முகம் கழுவுவதைப் பார்த்துவிட்டு மறுபடி உள்ளே சென்றுவிட்டாள். இவள் முகம் கழுவுவதை நிறுத்திவிட்டு அப்படியே நின்றாள். நீரில் தன் முகத்தைப் பார்த்தாள். அலையாடிய நீர் இவள் முகத்தை மறைத்து வினய்யின் முகத்தைக் காட்டியது. வினய் நம்மைக் காப்பாற்ற வருவானா? அவன் நமக்காக வரவேண்டிய காரணம் என்ன இருக்கிறது? உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் வருகிறான் என்றால் என்னை காதலிக்கிறானா? இத்தனை நாட்களில் அதற்கான எந்த செய்கையும் அவனிடம் தெரியவில்லையே! நான் அவனை காதிலிக்கிறேனா? காதலித்தால்தான் என்ன? ஆபத்து என்று தெரிந்தும் எனக்காக வருகிறான் என்றால் இதைவிட ஒருவனை காதலிக்க என்ன தகுதி வேண்டும்? வினய்யின் நினைவுகளில் மூழ்கிப் போனாள்.
ரத்தன் பேசாமல் அமர்ந்திருந்தான். வெளியில் நின்றிருந்தவன் அந்த இருபக்க கேட்டினை யாரோ தட்டும் சத்தம் கேட்டு சென்று பார்த்தான். பார்த்துவிட்டு இந்தப் பக்கத்து கேட்டின் பூட்டை திறந்தான். சிறிது நேரத்தில் அந்தப் பக்கத்திலிருந்து இரு பெண்கள் இரு கைகளாலும் ஒரு பெரிய கூடை இரண்டை இரண்டு முறையாக பிடித்து வந்து வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றுவிட்டனர். அந்தக் காவலன் ரத்தனும் மற்றவர்களும் இருந்த அறையின் கேட்டைத் திறந்துவிட்டு படியின் மீது சென்று அமர்ந்துவிட்டான். அறையில் இருந்தவர்கள் கேட்டைக் கையால் மேலே தூக்கிவிட்டு வேகவேகமாகச் சென்று அந்தக் கூடைகளில் இருந்து எதையோ எடுத்து கைகளில் வைத்து பிட்டு பிட்டுத் தின்று கொண்டிருந்தனர். ரத்தன் கடைசியாக வெளியே வந்தான். அவர்கள் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான். அங்கிருந்த ஒருவரிடம்,
‘ண்ணா! என்னண்ணா சாப்புட்றிங்க? அதுவும் இவ்ளோ வேகவேகமா’
அவர்,’தம்பி, இத நீ பார்த்ததில்ல. இதான் தம்பி களி. சீக்கிரம் நீயும் ஒண்ணு எடுத்து தின்னு. தின்னுட்டு இன்னொண்ணு எடுத்துக்க. மதியம் வரைக்கும் வேலை செய்யணும். மரம் அறுக்கணும். பசி எடுக்க ஆரம்பிச்சிடும். சீக்கிரம் எடுத்து தின்னுப்பா, காலியாகிடப் போகுது’
ரத்தன் ஒன்றுமறியாமல் முழித்தான்.
No comments:
Post a Comment