Get Best Only
பாகம் 24
ரேஷ்மா எழுந்து அமர்ந்தாள். சுற்றிலும் இருந்தவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். எங்கே இருக்கின்றோம்? இவர்கள் யார்? நம்மை தூக்கிக் கொண்டு வரக் காரணம் என்ன? நாம் இவர்களின் வழியில் வரவே இல்லயே? நம்மை எதற்காக கடத்தி வந்தார்கள்? என அவள் மனதில் நூறு கேள்விகள். இனி நம் வாழ்க்கை இங்கேதான்; இவர்களோடு இங்கேயே கிடந்து சாகப்போகிறோம்; இருப்பதை உடுத்திக்கொண்டு கிடைப்பதை குடித்திக்கொண்டு சாகும்வரை கிடக்கப்போகிறோம் என்றெல்லாம் எண்ணிக்கொன்டிருந்தாள். லேசாகத் தலையைத் தூக்கிப் பார்த்தாள். எதிரில் இவளைப் போலவே மேடையில் ஒரு ஆளை கிடத்திப் போட்டிருந்தார்கள். மெதுவாக இறங்கினாள். அந்த ஆளை நோக்கி நடந்தாள். அருகில் சென்றவளுக்கு அதிர்ச்சி. அது ரத்தன். மயங்கிய நிலையில் கிடந்தான். அவள் அதிர்ச்சி நீங்காதவளாய் அவனது முகத்தில் தட்டி எழுப்ப முயர்ச்சித்தாள். பலனில்லை. அருகிலிருந்த பானையில் கையை விட்டாள். சில்லென்று தண்ணீர் இருந்தது. அள்ளி ரத்தன் முகத்தில் தெளித்தாள். சில்லென்ற தண்ணீர் பட்டவுடன் ரத்தன் நடுங்கி எழுந்து அமர்ந்தான். எழுந்தவனின் கண்ணில் ரேஷ்மா தெரிந்தாள்.
‘ரேஷ்மா உனக்கு ஒண்ணும் ஆகலியே? என்ன பண்ணாங்க? இது எந்த இடம்? எங்க இருக்கோம் நாம?’
ரேஷ்மா பொறுமையாக கூறினாள்.
‘எனக்கென்னமோ நாம நரகத்துக்கு வந்திருக்கோம்னு தோணுது’
‘நரகமா? அது செத்தபிறகில்ல போவாங்க? நீ என்ன உளறிகிட்டு இருக்க?’
‘ஆமா, இது நரகம் தான். திரும்பி போக முடியாத நரகம்’
‘திரும்பி போக முடியாதா? எவன் சொன்னான்? வினய்யும் சுனிலும் வந்துகிட்டு இருக்காங்க, எப்படியும் நம்மள காப்பாத்தி கூட்டிப்போயிடுவாங்க’
அதைக் கேட்டவுடன் ரேஷ்மாவுக்கு ஆனந்தமானது. புது நம்பிக்கை வந்தது. காரணம், அவர்களை இங்கே கொண்டு வரவில்லை. ஏனெனில் அவர்களை பிடிக்க முடியாமல் போயிருக்கலாம். எனக்காக, எங்களுக்காக வந்துகிட்டு இருக்காங்க. ஒரு வேள அவங்க மாட்டிகிட்டு இருந்தா; அவங்கள இங்க கொண்டு வராம வேற எங்கயாவது வச்சிருந்தா? கொன்னு போட்டிருந்தா? இல்ல, இல்ல அப்படி நடந்திருக்காது; நடக்காது, வினய் வருவான். எனக்காக வருவான். என்னை இங்கிருந்து கண்டிப்பா கூட்டிகிட்டு போய்டுவான். எனக்கு ஒண்ணும் ஆகாது. அவனுக்கும் ஒண்ணும் ஆகாது திரும்ப திரும்ப தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
‘ஏய்’
திடுக்கிட்டவள், திரும்பிப் பார்த்தாள். அந்த கேட்டுக்கு வெளியே ஒருவன் நின்றிருந்தான்.
‘வா’ என்றான்.
ரேஷ்மா மெதுவாக அவன் அருகில் சென்றாள். அவன் பூட்டை திறந்து கிரில் கேட்டை மேல்நோக்கி தூக்கினான்.
‘வெளிய வா’
அவள் தயங்கிக்கொண்டே வெளியே போனாள். அவளுக்கு பின்னால் நின்று ரத்தன் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வெளியே வந்ததும் கேட்டை கீழிறக்கி பூட்டினான். ரேஷ்மா கையைப் பிடித்து இழுத்தவாறு கூட்டிப்போனான். அங்கே இரண்டு கேட்டுகள் இருந்தன. ஒன்று இந்தப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இன்னொன்று அந்தப் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அவன் இந்தப் பக்க கதவின் தாழ்ப்பாளைத் தட்டினான். அந்தப் பக்க கேட்டை திறப்பதற்கு ஆள் வரவில்லை. மறுபடி ஓங்கி இரண்டு மூன்று முறை ‘”டங், டங்” கென்று அடித்தான். அந்தச் சத்தம் அந்தப் பக்கம் இருந்த பெரிய அறை முழுதும் எதிரொலித்தது.
அந்தப் பக்கத்திலிருந்து ஒரு பெண்ணின் குரல்-
‘வர்றன்டா’
அந்த கேட்டின் பக்கவாட்டிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். பூட்டைத் திறந்தவாறு இவர்களைப் பார்த்தாள்.
‘வர்றதுக்குள்ள ஏன்டா காது கிழிய மாதிரி அடிக்கிற?’
‘இது புதுசு, கூட்டிப் போ’
‘ம்க்கும்’
ரேஷ்மா அந்த குறுகலான வழியில் நுழைந்து அந்தப் பக்கம் சென்றாள். இருபக்கமும் கேட்டுகள் பூட்டப்பட்டன. வந்தவள் ரேஷ்மாவை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள். இவன் இந்தப்பக்கம் வந்து ரத்தன் நின்றுகொண்டிருந்த கேட்டின் அருகில் இருந்த இரும்பு நாற்காலியில் அமர்ந்தான். இரும்பு கேட்டை இரு கைகளாலும் பிடித்தவாறு நடந்தவற்றை ரத்தன் பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்று புரியவில்லை.
No comments:
Post a Comment