Get Best Only
பாகம் 23
சிறிது தூரம்தான் நடந்திருப்பான். அவனது வலதுபுறத்திலிருந்தது ஏதோ சத்தம் வருவது கேட்டது. அங்கே பாறைகள் இருந்தன. சத்தம் அதற்கு பின்பக்கத்திலிருந்து வந்தது. அந்தப் பாறையைச் சுற்றி பார்த்துக்கொண்டே நடந்தான். யாரோ மண்ணை சீய்ப்பது போன்ற சத்தம். ஏதாவது காட்டுப்பன்றி அல்லது கரடியாக இருந்தால் என்ன செய்வது? இதை உதாசீனப்படுத்திவிட்டும் கடந்து போக முடியாது. மனிதவாடையை கரடி போன்ற மிருகங்கள் எளிதாக கண்டுவிடும். பின்னாலேயே தொடர்ந்து வந்து அடித்து கொன்றுவிடும். என்னவென்று உறுதிப்படுத்திவிட்டு செல்வதுதான் நல்லது. மெதுவாக பாறைகள் மீது சாய்ந்தவாறு நடந்து எட்டிப் பார்த்தான். குதிரைகள், இல்லை குதிரை வண்டிகள்; இரண்டு குதிரை வண்டிகள். இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இரண்டு குதிரை வண்டிகள். குதிரைகள் வண்டியோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது. தரையில் அடிக்கப்பட்டிருந்த கம்பிகளில் கட்டப்பட்டிருந்தது. அவர்கள் இந்த இடத்தை வழக்கமாக பயன்படுத்துவதை உணர்த்தியது. நேற்று இரவு வினய்யும், சுனிலும் பார்த்து சண்டை போட்டவர்களின் வண்டிகளாகத்தான் இருக்க வேண்டும்.
புது ஆளைப் பார்த்தமையால் அந்த இரண்டு குதிரைகளும் கனைக்க ஆரம்பித்தன. இவன் இரண்டு அடி முன் எடுத்து வைத்தான். குதிரைகள் தலையை ஆட்டி பின்னேறின. இவனைப் பார்த்து அவைகள் பயந்தன. அதிகமாக கனைத்தன. இரண்டாவதாக இருந்த குதிரை அதிகமாகவே பயந்துவிட்டதாகவே காணப்பட்டது. முன்னும் பின்னும் ஆடியவாறு இருந்தது. முன்னங்காளால் மண்ணைச் சீய்த்துக்கொண்டிருந்தது. இவன் குனிந்து முதல் குதிரையின் கயிற்றை கம்பியிலிருந்து அவிழ்த்துவிட்டான். அது சற்று வேகத்துடன் வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. எந்த வழியில் செல்கிறது என நோட்டமிட்டான். பொதுவாக விலங்குகள்; அதாவது மனிதன் பழக்கி வைத்திருக்கும் விலங்குகள் அதற்கு பழக்கப்பட்ட பாதையைத்தான் தேர்ந்தெடுக்கும். அந்தக் கண்ணோட்டத்தில்தான் வினய் அந்தக் குதிரையை அவிழ்த்துவிட்டான். நேற்று இரவு அவன் கூறியது போலவே சற்று இடப்பக்கமாக நேராக இருந்த வழியில் குதிரை ஓடியது. வினய் அடுத்த குதிரையிடம் நெருங்கினான். அது மிரண்டுபோய் இருந்தது. குனிந்து அதன் கயிற்றை அவிழ்த்துவிட்டான். அந்த குதிரை வினய்யை முட்டித் தள்ளிவிட்டு வேகமாக ஓடியது. இந்தக் குதிரை வண்டியில் ஏறி செல்லலாம் என எண்ணிய வினய் ஏமாந்தான். ஆனால் இவற்றை விட்டுவிட்டால் பாதையை கண்டுபிடிப்பது கடினமாகிவிடும் என்பதால் சட்டென எழுந்து ஓடினான். சிறிது தூரம் கூட அவனால் அந்தக் குதிரைகளை பின்தொடர்ந்து ஓடி ஈடுகொடுக்க முடியவில்லை. அவை மின்னல் வேகத்தில் ஓடிவிட்டன. அவை ஓடிச்சென்று மறையும் வரை நின்று அவைகளையே பார்த்துக்கொண்டிருந்தான். நடக்க ஆரம்பித்தான். ஒரே வழி; நேர் வழி, இரு பக்கமும் மரங்கள். செம்மண், மரங்களின் இலைகள் விழுந்து கிடந்தன. வண்டி சக்கரத்தின் தடங்கள். வழி முழுவதும் இந்த தடங்கள் இருந்தது. பாதையைக் கண்டுபிடிப்பது சுலபமாகிவிடும் என எண்ணிக்கொண்டான்.
இதற்கு முன் அவன் இவ்வளவு தூரம் தொடர்ந்து நடந்திருப்பானா என்பது சந்தேகம்தான். நேற்று இரவு ஆரம்பித்த ஓட்டம். இன்னு நிற்கவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பது கூட இவனுக்குத் தெரியாது. ஆனாலும் விடாது செல்கின்றான். வழி கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி கூட்டிச் சென்றது.