Get Best Only
பாகம் 22
காட்டிற்குள்-
வினய் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். மரங்களின் ஊடே சூரியன் தன் கதிர்களை செலுத்த முயன்று கொண்டிருந்தது. அதில் சில கதிர்கள் இவனின் மீது படர்ந்து விடிந்துவிட்டதை உணர்த்தியது. லேசாக நெளிந்து கொடுத்தவன் சட்டென எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. பாதையை விட்டு சற்று விலகி வந்து படுத்து இருந்திருக்கிறான். மெதுவாக எழுந்து பாதையின் இருபுறமும் பார்த்தான். யாரும் வரவில்லை. கழுத்தை இருபக்கமும் திருப்பி சுளுக்கெடுத்துக்கொண்டு ஆற்றை நோக்கி மெல்ல நடந்தான். நேற்று மதியம் சாப்பிட்டதோடு சரி. இரவும் சாப்பிடவில்லை. இரவெல்லாம் நடந்துகொண்டிருந்ததில் தெம்பு மொத்தம் காணாமல் போயிருந்தது. பசி அவனை வதக்கியது. இருந்தும் நடப்பதை மட்டும் நிறுத்தவில்லை. நடந்துகொண்டெயிருந்தான். அவ்வழியின் இறுபுறமும் இருக்கும் செடிகளில் ஏதாவது பழம் இருக்கிறதா என்பதை நோட்டமிட்டபடி சென்றான். அது மழைக்காலம் என்பதால் எந்த செடியிலும் பழம் இல்லை. வசந்தகாலத்தில் காய்த்து கனிக்கும் செடிகளாக காணப்பட்டது. பசியைப் பொறுத்தவாறு சற்று வேகமாக நடந்து ஓடத்தொடங்கினான். மணல் அவன் கால்களை கவ்வியது. நன்றாக விடிந்திருந்தது. வயிறு, அவன் மொத்த உறுப்புகளையும் வேலைனிறுத்தம் செய்யவைத்தது. அவன் ஓடுவதை நிறுத்தி நடக்கலானான். ஓட்டமும் நடையுமாய் ஆற்றைத் தொட்டிருந்தான்.
ஆறு முழுவதும் நீர் ஓடிக்கொண்டிருந்தது. இருகரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடிய நீரில் பாசிகள் படிந்திருக்கவில்லை. இவன் ஆற்றின் அருகில் வந்து அமர்ந்தான். அப்படியே குனிந்து இருகைகளாலும் நீரை அள்ளி முகத்தை கழுவினான். முகத்தை நன்றாக கழுவிவிட்டு கொஞ்சம் அள்ளிப் பருகினான். இனித்தது. இரண்டு, மூன்று முறை நீரை அள்ளி குடித்துவிட்டு அவன் உடல் முழுவதும் இருந்த சேறையும் கழுவி விட்டுக்கொண்டான். கை, கால்களில் ஆங்காங்கே சிராய்ப்புகள். வலது கை முட்டியில் மட்டும் கொஞ்சம் அதிகளவில் காயம் பட்டிருந்தது. ரத்தம் வந்து காய்ந்து போய் இருந்தது. எச்சிலை கையில் துப்பி காயத்தின் மீது வைத்துக்கொண்டான். அங்கே ஆற்று சேற்றில் சேற்றுக்கிழங்கு செடிகள் ஏராளமாக முளைத்திருந்தது. அவற்றை கையால் தோண்டினான். நல்லவேளையாக அவை நன்றாக வளர்ந்து கிழங்குகள் பெருத்திருந்தது. கிழங்கோடு சேர்த்து பிடுங்கினான். நீரில் நன்றாக அலசிவிட்டு கிழங்கை மட்டும் தனியாக பிய்த்தெடுத்தான். தோலை நகத்தால் உரித்தான். பொதுவாக சேற்றுக்கிழங்குகள் வேகவைத்து சாப்பிட ஏற்றவை அல்லது நேறாக அடுப்பிலிட்டு சாப்பிடலாம். நெருப்பிடாமல் சாப்பிட்டால் சற்று கார்ப்பது போல் இருக்கும். இதன் அளவு பெரிதாகப்பார்த்தால் முழு தொலும்போடு கூடிய மணிலாவின் அளவு இருக்கும். அந்தக் கிழங்கின் தோலை உரித்தான் வினய். முழுதாக வாய்க்குள் கடித்துச் சாப்பிட்டான். இன்னும் அங்கு இருக்கும் சேற்றுக்கிழங்குகளை தோண்டி எடுத்தான். அவற்றையும் நீரில் அலசி உரித்துச் சாப்பிட்டான். போதும் போதும் என்ற அளவுக்குச் சாப்பிட்டான்
வயிறு நிரம்பியது. எழுந்தான்.போகும் வழியில் தண்ணீர் கிடைக்காமல் போனால் என்ன செய்வது? இங்கிருந்தே கொண்டு செல்வது நல்லது என்பதால் எதாவது பாட்டில் அல்லது கேன் கிடைக்குமா என்று தேடினான். ஏதும் தென்படவில்லை. சரியென்று ஆற்றின் வலப்பக்கமாக நடக்க ஆரம்பித்தான். பாலம் எங்கிருக்கிறது என்று தேடினான். தூரத்தில் ஆற்றின் நடுவே ஏதோ தென்பட்டது. பைனாகுலரின் வழியே பார்த்தான். சிரியதாய் ஒரு பாலம் தெரிந்தது. அருகில் சென்றான். இரண்டு நீளமான கம்புகளை கீழே போட்டு பிடித்துக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக ஒரு கயிறு இரு கரைகளில் இருந்த மரங்களில் கட்டப்பட்டிருந்தது. கரையில் இருந்த சிறுவழியின் வழியே அந்தப்பாலத்தை அடைந்தான். உடம்பில் தெம்பு கூடியிருந்தது. நாலைந்து கழிகளை முன்னும் பின்னுமாக இணைத்து கட்டி பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இரட்டைக் கயிற்றால் கட்டப்பட்டிருந்த தாங்குக்கயிறு மிகவும் வலுவாகவே இருந்தது. ஒரே சமயத்தில் நாலு பேர் கூட அந்த பாலத்தின் வழியே செல்ல முடியும். அந்த அளவிற்கு நல்ல வலுப்பெற்ற மரங்களின் கழிகளையே பாலம் அமைக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் வழுக்கி விழுந்துவிடக் கூடாது என்பதால் கவனமாகவே பாலத்தின் மீது நடந்து சென்றுகொண்டிருந்தான். ஆற்றின் அக்கரையைத் தொட்டிருந்தான். இதுவரை அவன் மனதில் இல்லாதளவில் ஒருவித பயம் அவனைத் தொற்றிக்கொண்டது. ஆற்றின் அந்தக் கரையில் இருப்பது வேறொரு உலகம் போலவும், இந்தப்பக்கம் இருப்பது வேறொரு உலகம் போலவும் அவன் அனதில் தோன்றியது. மனதை திடப்படுத்திக்கொண்டு தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு முன்னோக்கி நடந்தான்.