Get Best Only
பாகம் 15
ஐவரும் ஊர்ப்பெரியவரின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு அவர்களது அந்த வீட்டிற்குச் சென்றனர். அனைவரும் அமர்ந்தனர்.
வினய்,’இவங்க சொல்றது ஒண்ணும் வெளங்கமாட்டேங்குது’
சுனில்,’இவங்க சொல்ற மாதிரி பேய் விரட்ட வந்தவங்களையே விரட்டி விரட்டி அடிக்குதுன்னா கண்டிப்பா அதுக்கு ஏதோ பெரிய அளவுல நிறைவேறாத ஆசை இருக்கணும். ஆனா பேய் ஓட்றவங்கள பேய் விரட்டி அடிச்சத இதுக்கு முன்னாடி நான் கேள்விப்பட்டதில்ல’
ரேஷ்மா, ’நான்கூட கேள்விப்பட்டதில்ல. இவங்க சொல்ற மாதிரி அது பேயில்லாம வேற ஏதாவது ரகசியத்த மறைக்க நினச்சு, அந்தப் பக்கமே யாரும் போக முடியாத அளவுக்கு பயமுறுத்தி வச்சிருந்தா?’
யாரிடமும் பதிலில்லை.
வினய், ’OK, LETS GO FOR A WALK; WHO GONNA JOIN WITH ME?’
அனைவரும் கைத்தூக்கினர்.
மாலை 6 மணி-
ஆச்சர்யப்படும் வகையில் அனைவரும் தெருவில் சுற்றிகொண்டிருந்தனர். அனைவரது வீட்டிலும் மாவிலைத் தோரணம், வேப்பிலத் தோரணம். புதிதாக வாசல் தெளித்து கோலம் போடப்பட்டிருந்தது. சிலரது வீட்டின் கோலத்தில் அகல் விளக்கு, குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது. அனைவரும் இரவு பூஜைக்கு உண்டான வேலையில் மும்முறமாக இருந்தனர். கோயிலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்மன் சிலையும் அலங்காரத்தில் ஜொலித்தது. அம்மனுக்கு புதுச்சேலை அணிவித்து, ஆபரண அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. அதன் அருகே எல்லைச்சாமியின் வெண்கலத்தால் ஆன சிறிய சிலையும் இருந்தது. சாமிப்படையல் போடுவதற்கு முன் ஊரில் ஏதேனும் கெட்டசக்தி இருந்தால் அதை ஊரைவிட்டு எல்லைத்தாண்டி விரட்டி விட்டு வருவதற்காக எல்லைச்சாமி எல்லாத் தெருக்கள் வழியாகவும் சென்று ஒருமுறை ஊர் எல்லை வரை கொண்டு செல்லப்பட்டு கொண்டு வரப்படும். சாமிப்படையலின் போது அம்மன் யார் மூலமாவது வந்து ஊரில் உள்ளவர்களின் குறைகளைக் கேட்கும். அச்சமயம் ஊர் எல்லைச்சாமியின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது அனைத்து ஊர்களிலும் பொதுவே.
ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர். அம்மனுக்கு அறுசுவையிலும் ஆன நெய்வேத்தியம் படைக்கப்பட்டிருந்தது. அங்கே காடுகளில் கிடைக்கக்கூடிய திணைவகைகளும், இந்த வருடம் கோயில் நிலத்தில் அறுக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள், கம்புக்கதிர்கள், சோளக்கதிர்கள் படைக்கப்பட்டிருந்தது. பழ வகைகளும், கற்கண்டு, பேரிச்சை போன்றவைகள் வாங்கப்பட்டு அவைகளும் அம்மனின் திருவடிகளில் படைக்கப்பட்டிருந்தது. மேளதாளங்கள் ஒலிக்கப்பட்டு, நாதஸ்வரம் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அனைவரும் அம்மன் யார் மேலாவது வரவேண்டும் என்பதற்காக காத்துக்கொண்டிருந்தனர். பூசாரி கையில் உறுமியை வைத்துக்கொண்டு அதைத் தட்டியவாறு சாமிக்கு பாடும் பாடலை பாடிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்தில் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் மீது இறங்கியது. அந்தப் பெண் அங்கும் இங்குமாக ஆடிக் கொண்டிருந்தாள். பூசாரி உறுமி அடிப்பதை நிறுத்தவில்லை. இப்போது அந்தப் பெண்ணின் பக்கம் திரும்பி உறுமியை வேகமாக அடித்தவாறு சாமிக்குப் பாடும் பாடலை உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார். அனைவரும் கைகளை கூப்பி வணங்கிக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவே அந்தப்பெண் அங்கும் இங்கும் அலைந்து அலைந்து ஆடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் பூசாரி உறுமியின் வேகத்தைக் குறைத்து பாடல் பாடுவதை நிறுத்தினார். அந்தப் பெண்ணின் அருகில் சென்று நின்றார். ஒரே மயான அமைதி.
பூசாரி, ’வந்திருக்கிறது யாரு?’
பெண் ஒன்றும் பேசவில்லை.
மறுபடி, ’யாரு தாயே நீ?’
அந்தப் பெண்ணோ, ’நான்தான்டா வந்திருக்கேன்’ என்றாள்.
‘நான்தான்னா, உன் பேர சொல்லு’
‘திரௌபதிடா’
அனைவரும் ‘அம்மா, தாயே’ என்று உரத்த குரலில் கும்பிட்டனர்.
பூசாரி, ’தாயே, எங்கப்படையல் உனக்கு ஏர்வையா?’
‘ஏர்வ’
‘ஒரு குறையும் இல்லியே?’
‘இல்ல’
‘தாயே, நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கப் போறேன். அதுக்கு பதில் சொல்லிட்டுத்தான் நீ போகணும் ‘
‘கேளு’
‘உன் சிலைய இப்டி உடச்சது யாரு?’
கேள்வி முடிவதற்குள் சாமி வந்து ஆடிக்கொண்டிருந்த அந்தப்பெண்ணின் பின்னே நின்று கொண்டிருந்த ஒரு ஆண், பூசாரியை தலையால் ஒரு முட்டு முட்டி கீழே தள்ளினான்.
இதைப்பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போயினர்.
இந்தக் காட்சியைக் கண்ட ரேஷ்மாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அவளால் அந்தக் காட்சிகளை காண இயலாமல் சற்று குழப்பத்துக்கு ஆளானவள் போல் காணப்பட்டாள்.. இனி இங்கு நிற்க வேண்டாம் என்று கருதியவள் போல் மெதுவாக கூட்டத்தின் ஓரமே நகர்ந்து அந்த வீட்டை நோக்கி நடக்கலானாள், தனியாக.