Get Best Only
பாகம் 13
சுனில் சுயநினைவிற்கு வந்திருந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி. சுனிலும் காலைக்கடனை முடித்து பல் துலக்கிவிட அனைவரையும் பேட்டியெடுக்க கிளம்பினர். அந்த பெரியவரின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினர். அவரின் மனைவி வந்து கதவைத் திறந்தாள்.
வினய்,’ சார் இல்லியா?’
‘தோட்டத்துக்கு போயிருக்கார், வந்துடுவார், உட்காருங்க. சமையல் செஞ்சிருக்கேன். எல்லாரும் ஒண்ணா சாப்டலாம்’
பேசிக்கொண்டிருக்கும்போதே முனையில் இருந்த கோயிலில் கத்திக்கொண்டே ஒருவர் ஓடிவந்தார். அவர் உருவம், அணிந்திருந்த காவி வேட்டி, நெற்றி நிறைய விபூதி, கையில் உடுக்கை, இன்னொரு கையில் ஜாட்டி அவரை அந்தக் கோயில் பூசாரி என்பதை உணர்த்தியது. கத்திக்கொண்டே தெருவின் இருமுனைகளையும் தொட்டுக்கொண்டே ஆடிக்கொண்டு இவர்களைக் கடந்து போய்க்கொண்டிருந்தார். தெருவின் கடைசிக்கு போகும்வரை பார்த்துக்கொண்டிருந்தனர்.
திரும்பி அந்தப்பெண்ணிடம்,’ இவரு அந்தக்கோயில் பூசாரியா?’ என்று கேட்டான் வினய்.
‘ஆமாப்பா, நேத்து பௌர்ணமி இல்ல. அதான் இப்டி ஆடிக்கிட்டு போறாரு. எல்லா பௌர்ணமிக்கு அடுத்த நாளும் இப்டிதான் ஆடிக்கிட்டுப் போறாரு. இப்பதான் கொஞ்ச நாளா இப்டி பண்றாரு. ஏன், என்னனு ஒண்ணும் புரியல’
ஊர்ப்பெரியவர் வந்தார்.
‘என்ன தம்பி, அந்தப் பூசாரி ஆடிக்கிட்டு போறத விசாரிச்சிக்கிட்டு இருக்கிங்களா? இப்பதான் கொஞ்ச நாளா இப்டி பண்றாரு. அடுத்தநாள் கேட்டனா “அப்டியா பண்ணேன்”னு சொல்லுவான். அதனால நாங்க யாரும் அவன கேக்கறதும் இல்ல, கண்டுக்கறதும் இல்ல. நீங்க வாங்க தம்பி சாப்ட போலாம்’
இவர்கள் திரும்பிப்பார்த்தபோது பூசாரி தென்படவில்லை. தெருவைக் கடந்து போயிருந்தார்.
அனைவருக்கும் இலையில் உணவு பறிமாறப்பட்டது. வெள்ளைச்சோறு, கத்திரிக்காய் சாம்பார், கூட்டு, பொறியல் சகிதம் உணவு பறிமாறப்பட்டது.
‘தம்பி, எங்க ஊருக்கு வ்ர்றவங்களுக்கு எல்லாருக்குமே இப்டிதான் சாப்பாடு போட்டுக்கிட்டிருக்கோம். அவங்க சாப்புட்ற கடைசி சாப்பாடு நல்ல சாப்பாடா இருக்கணும்ல’
நால்வரும் எடுத்த சாப்பாட்டை வாயில் வைக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
‘சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன். அவங்க யாரும் ஊர்க்கட்டுப்பாட்ட மதிக்கல. ராத்திரி 9 மணிக்கு காட்டுக்குள்ள போறது, 12 மணிக்கு வெளிச்சத்த போட்டுகிட்டு எதாவது தெரியுதானு பாக்குறது அப்டினு இருந்ததாலதான் அப்டியெல்லாம் ஆனது.நீங்க அப்டிலாம் ஊர்க்கட்டுப்பாட்ட மீற மாட்டிங்க, அப்டிதான?’
‘ஆமாங்கய்யா, இந்த ரெண்டு நாள் நீங்க சொல்றபடிதான் நடந்துப்போம். உங்களுக்கு தெரியாம எங்கயும் போகமாட்டோம், எதுவும் பண்ணமாட்டோம்’
‘அப்டி இருந்துட்டா உங்க ஊர பார்க்கலாம்’
அனைவரும் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தனர்.
‘சார், இப்போ போனாரே பூசாரி , அவர்கிட்ட பேச முடியுமா?’
‘அந்தாளு இன்னிக்கு பூராவும் இப்டியே சுத்திகிட்டு கெடப்பான். சாப்ட மாட்டான், யார்கிட்டயும் பேசவும் மாட்டான். நீங்க எங்க ஊர்லயே பெரியவர் ஒருத்தர் இருக்காரு, அவர மொதல்ல பாருங்க, என்ன?’
‘சரிங்க’ என்றனர் நால்வரும்.
சொல்லிவிட்டு அவர் பின்னால் சென்றனர். கோயிலைத் தொட்டு ஊரின் வெளிச்செல்லும் பாதையில் இருக்கும் ஒரு வீட்டின் முன் சென்று நின்றனர்.
அந்தப்பெரியவர் வீட்டின் உள்பக்கம் நோக்கி ,’அய்யா பெரிய பாட்டனா, என்று கூப்பிட்டார். எந்த பதிலும் இல்லை.
கொஞ்சம் சத்தமாக,’ அய்யா பெரிய பாட்டனா’ என்றார் மறுபடியும்.
திரும்பி இவர்களிடம்,’ அவருக்கு காது சரியா கேக்காது. நீங்களும் பேசும்போது கொஞ்சம் சத்தமாவே பேசுங்க, சரியா?’
நால்வரும் தலையாட்டினர்.
உள்ளிருந்து,’ யாரு.... யாரது?’
பெரியவரின் குரல் கேட்டது. கையில் ஊணிக்கொம்புடன் பெரியவர் வெளியே வந்தார். அவர்தான்.. அவரேதான். நேற்று சாயுங்காலம் ஊருக்குள் வந்தபோது திரும்பிப்போகும்படி எச்சரித்த அந்தப் பெரியவர்.
உள்ளிருந்து வந்தவர் இவர்களை ஏறிட்டுப் பார்த்து ‘இன்னுமா இதுங்க இருக்குதுங்க?’ என்றார்.
இவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. இவர் எந்த அர்த்தத்தில் கேட்கிறார்.ஊரைவிட்டு போகவில்லையா? என்று கேட்கிறாரா? இல்லை ஒரேயடியாய் போகவில்லையா என்றா?
சுனில் குறுக்கிட்டு
‘அய்யா உங்க ஊரப்பத்தி தெரிஞ்சிக்கத்தான் நாங்க வந்திருக்கோம். நீங்க சொல்ற விஷயம் உங்க ஊரோட தலையெழுத்தையே மாத்தலாம். இங்க என்ன நடக்குதுனு எங்களுக்கு சொன்னீங்கனா நாங்க பத்திரிக்கைல போடுவோம். அதப்பாத்து கவர்மென்ட் உங்க ஊருக்கு எதாவது நல்லது பண்ணும்’
,தம்பி உங்கள இங்க அனுப்புனது யாரு?’
‘எங்க கம்பெனி’
‘கம்பெனில யாரு?’
‘எங்களோட எடிட்டர்’
;அவருக்கு எப்டி எங்க ஊரப்பத்தி எப்டி தெரிஞ்சிருக்கும் சொல்லு’
‘ ‘
‘அவரும் எதாவது ஒரு பத்திரிக்கைல தான் படிச்சிருப்பாரு’
அதற்குமேல் யாராலும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
‘தம்பி.. உங்கள மாதிரி நெறய பேரு வந்தாங்க. சில பேரு திரும்பிப் போனாங்க. நெறய பேரு திரும்பிப் போகல. உங்களுக்கு சொல்லி சொல்லியே எங்களுக்கு நாக்குத்தண்ணி போச்சுய்யா. போங்க, போயி வேற யார்கிட்டயாச்சும் கேளுங்க’
வந்தவர்கள் வாயடைத்துப் போயினர்.