Get Best Only
பாகம் 21
அந்நேரம் அங்கே-
இருவர்களால் ரத்தன் இழுத்துவரப்பட்டு ரேஷ்மாவைப் போலவே இழுத்தெறியப்பட்டான். இரும்பு கிரில்களாலான பெரிய கதவு மேலிருந்து கீழ் இறங்கியது. மண்ணைத் தாண்டி தரையில் புதைந்தது. பூட்டிடப்பட்டது. ரேஷ்மா ஒரு உயர்ந்த மேடை போன்ற இடத்தில் கிடத்தப்பட்டிருந்தாள். மயக்கநிலையில் இருந்தாள். ரத்தனையும் அதே போன்று மேடை ஒன்றில் கிடத்தினர்.
வினய் நிறைய தூரத்தைக் கடந்திருந்தான். நேரம் எப்படியும் மூன்றைக் கடந்திருக்கும். களைப்புற்றிருந்தான். மிக மெதுவாக தள்ளாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்தான். இதற்குமேல் ஒரு அடி கூட நடக்க முடியாது என்பதுபோல் சுருண்டு கீழே அமர்ந்தான். அப்படியே நகர்ந்து நகர்ந்து ஒரு மரத்தின்மேல் சாய்ந்தான். கண்ணை மூடினான். உறங்கிப்போனான்.
பண்டிகை நாள் என்பதால் அனைவரும் எழுந்து அதற்குண்டான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கூழ் வார்த்தல் மதியம்தான் என்றாலும் வீட்டை அலங்கரிப்பது, கூழ் ஆக்குவது, படையலுக்குத் தேவையான வடை, அதிரசம். அப்பளம், பாயாசம் போன்றவற்றை வீட்டிலேயே செய்ய வேண்டி இருப்பதால் அனைவரும் சுறுசுறுப்பாக எழுந்து வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அனைவரது வீட்டிலிருந்தும் கேப்பக்கூழ், கம்பங்கூழ், சோளக்கூழ், படையல் என அனைத்தும் சமநிலயில் வரவேண்டும். இதுபோக கோயில் நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களால் செய்யப்பட்ட கூழும் தயார் நிலையில் இருக்கும். தனித்தனியே அத்ற்குண்டான கொப்பரைகளில் கூழ் ஊற்றப்படும். அதுமட்டுமல்லாது அம்மனுக்குப் பிரியமான அரிசிமாவுப் பண்டம் படையலில் வைக்கப்படும்.
இவ்வூரில் அனைவரும் அதிகாலையில் எழுந்து நடமாடுவது இன்றொரு நாள் மட்டுமே. ஊர்ப்பெரியவரது வீட்டில் அவர் சற்று தொய்வுடன் காணப்பட்டார். அந்த வழியே போன பூசாரி,’என்னங்கய்யா ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா உட்காந்திருக்கீங்க?’ என்று கேட்டவாறு அருகில் வந்தார்.
‘அந்தப் பசங்கள வீட்ல காணோம். ராத்திரி படையல் முடிஞ்சி அந்த வீட்ல போய் பாத்தப்போ அவங்கள காணோம்’
இருவரும் மௌனமாகினர்.
பூசாரி, ’நீங்க என்ன நினைக்கிறீங்க?’
‘என்ன நடந்திருக்கும்னு அனுமானிக்க முடியல. ஒரே ராத்திரியில நாலு பேரையும் எப்படி தூக்கிட்டுப் போயிருக்க முடியும். அதுவும் படையல் போட்ற அன்னைக்கு ஊருக்குள்ளயே வந்து; நான் அவங்கள படையல் போட்டப்போ பாத்தேன். அதுக்கப்புறம் இருந்த கொஞ்ச நேரத்துல என்ன நடந்திருக்கும். ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குது’
‘அய்யா, இதுல வெளங்கறதுக்கோ, வெளக்கரதுக்கோ ஒண்ணும் இல்ல. நாம இங்க இருந்த நேரம் அதுங்க ஊர் எல்லைய தாண்டி போயிருக்கும். அது இதுங்கள அடிச்சி கொன்னு போட்டிருக்கும். இதான இங்க நடந்துகிட்டிருக்கு. சொன்னா எங்க கேட்கறானுங்க. வராதீங்கனா வம்பா வர்றானுங்க; அந்தப் பக்கம் போகாதீங்கனா போய் சாகுறானுங்க. விட்டுட்டு வேலைய பாருங்கய்யா. இதென்ன இங்க புதுசா?’
சொல்லிவிட்டு பூசாரி நடையைக் கட்டினார்.
பெரியவரும் பூசாரி சொல்வது சரிதான் என்பதுபோல் அமைதியாய் இருந்தார்.