Get Best Only
பாகம் 20
திடீரென காட்டுக்குள் இருந்து ஒரு சத்தம். பலத்த காற்று; காட்டின் ஒருபக்கத்தில் இருந்து அந்த உருவத்தின் வலது பக்கமாக. அந்த உருவமும் சத்தம் வரும் திசையைப் பார்த்தது. வினய் பார்த்தபோது காட்டின் ஒரு பக்கத்திலும் பாதியளவே அந்த பலத்த காற்று; சுழல் காற்று போல அடித்து ஐந்தாறு மரங்களை மட்டுமே சேர்த்து அடித்தவாறு மிக வேகத்தோடு அந்த உருவம் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. வினய் நடப்பதறியாது பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த சுழல்காற்று பலத்த வேகத்தோடுஅந்த உருவத்தை நெருங்கியிருந்தது. அந்த உருவம் விலகி ஓட எத்தனித்த சமயம் அந்த சுழல் காற்று அப்படியே அந்த உருவத்தை தூக்கியது. தூக்கி சுழற்றிக்கொண்டே மரங்களின் முக்கால்வாசி உயரத்திற்கு தூக்கிச் சென்றது. அப்படியே அந்த சுழல்காற்று நின்று போனது. அவன் கீழே விழுந்துகொண்டிருந்தான். ஆனால் விழுந்துகொண்டிருப்பதை போல் அல்லாமல் ஏதோ ஒரு விசை கீழ்நோக்கி இழுத்துக்கொண்டு வருவதைப்போல் தெரிந்தது. இழுத்துக்கொண்டே வந்து தரையோடு தரையாக அடித்து, ஆற்று மணலில் சர்ரென்று சிறிது தூரம் இழுத்துப்போட்டது. மறுபடி காட்டினூடே வந்த வழியே முன்பை விட சற்று குறைவான வேகத்தில் சாதாரண காற்றாக சென்று சேர்ந்தது. இது அனைத்தையும் ஆடாமல், அசையாமல் வினய் பார்த்துக்கொண்டிருந்தான்.
காற்று சென்று சேர்ந்தபிறகு மெதுவாக எழுந்து வலதுபுறமாக அந்த புதைகுழியை சுற்றிக்கொண்டு முட்டிபோட்டவாறே ஓடினான். புதைகுழியைக் கடந்து கொஞ்ச தூரம்தான்; மறுபடி ஏதோ ஒரு சேற்றில் கையை ‘தொபக்’கென்று விட்டான். அவன் கையில் ஏதோ தட்டுப்பட்டது. அதைச் சேர்த்து இழுத்தான். சற்று சிரமப்பட்டுதான் வந்தது. அது ஒரு முழு மனிதனின் எலும்புக்கூடு. மண்டை ஓடு மட்டும் வெளியே தெரிந்தது. அதை அப்படியே உள்ளே தள்ளிவிட்டு எழுந்தான். முதலில் அடித்து கீழே தள்ளியவனிடம் ஓடினான். அவன் அப்படியே கிடந்தான். இறந்திருக்கலாம் எனக் கருதி அவன் ஏதாவது ஆயுதம் வைத்திருக்கிறானா? என்று உடல் முழுவதும் தேடினான். கிடைத்தது கத்தி. வெளியே எடுத்தான். நன்றாக வார்ப்பு செய்யப்பட்ட கத்தி. எடுத்துக்கொண்டு பள்ளவாக்கில் இறங்கி காற்று சுழற்றி இழுத்துப் போட்டவனை நோக்கி ஓடினான். ஏதும் புதைகுழியிலோ , இல்லை வேறு ஏதாவதிலோ சிக்கி விடக் கூடாது என்பதற்காக சற்று கவனமாகவே ஓடினான். அவனது அருகில் சென்று அவனது கழுத்தில் கத்தியை வைத்தான். ஆனால் அவனோ குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தான். முகத்தில் அணிந்திருந்த கண்ணாடி முகமூடி சிதறி போதாததற்கு மணலும் சேர்ந்து அவனது முகத்தை கிழித்தெடுத்திருந்தது. இரத்தம் முகத்தில் வழிந்தோடியது. கழுத்திலிருந்து கத்தியை எடுத்தான்.
வினய்,’ஏய்! ஏய்..! கேட்குதா?’
அவனோ இவனை பார்த்துக்கொண்டெயிருந்தான். ஏதும் பேசவில்லை.
‘என் ரேஷ்மாவ எங்கடா வச்சிருக்கீங்க?’
பதில் இல்லை. அவனை அப்படியே தூக்கி தன் தொடை மீது வைத்துக்கொண்டான். முகத்தை மூடியிருந்த முடியை காதோரம் தள்ளிவிட்டான்.
‘ரேஷ்மாவையும், ரத்தனயும் எங்க வச்சிருக்கீங்க? அவங்கள என்ன பண்ணீங்க?’
அவன் மெதுவாக சொன்னான்.
‘இந்த ஆத்துவழியே போனா... ஆறு வரும், அதயொட்டி வலது... வலது பக்கமா கொஞ்ச தூரம் நடந்து போ... அங்க ஆத்த கடந்து போறதுக்கு பாலம் இருக்கும்... அதத்தாண்டி அந்தப் பக்கம் போனா... நேராப் போகணும்... போய்க்கிட்டே இருந்தா ஒரு மலை வரும்... வெள்ளக் கல்லுங்க அதிகமா இருக்கும் உச்சியில... அந்த மலைய்ய சுத்திக்கிட்டு இடது பக்கமா போனினா... ரொம்ப தூரம்.... ரொம்ப... ரொம்ப... தூரம்....’
அவன் மூச்சு அடங்கியது. ஆனால் வழி கிடைத்து விட்டது. ரொம்ப தூரம் தாண்டி என்ன இருக்கிறது; இவர்கள் யார்? ஏன் இப்படி செய்கிறார்கள்? என்பதற்கு விடை கிடைக்கவில்லை. ஏதும் யோசிக்காமல் எழுந்தான். ஆத்துவழியே ஆற்றை நோக்கி நடந்தான். வினய்யும் சுனிலும் விழுந்த குழியில் ஏதோ அசைவு தெரிந்தது.