Get Best Only
பாகம் 19
மயக்க நிலையில் இருந்த ரேஷ்மாவை இழுத்து வந்து ஒரு பெரிய அறை போன்ற இடத்தில் கிடத்தினர். லேசாக கண் விழித்துப் பார்த்தாள். இரண்டு உருவங்கள் சென்று கொண்டிருந்தன. அப்படியே அசதியில் சாய்ந்து கிடந்தாள். அந்த உருவங்கள் சென்று மறைந்தன. அவளுக்கு பக்கவாட்டில் ஏதோ சத்தம் ஏதோ நடந்து வருவதைப் போன்ற சத்தம். ஆனால் ஒன்றல்ல, இருபுறமும். நாலைந்து இருக்கலாம். அப்படியே அவள் அருகில் வந்தன. அவள் அலறித்துடித்து அப்படியே இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டாள். மயங்கியிருந்தாள்.
வினய்யும் சுனிலும் ஆத்துவழியில் நெருங்கியிருந்தனர். சிறிது தூரத்தில் ஆத்துவழி. பள்ளமான வழி. மணல் முழுவதுமாய் பரவியிருந்தது. அவர்கள் மேட்டுப்பகுதியில் நின்றிருந்தனர். பின்பக்கம் ஆற்றில் ஓடு நீரின் சத்தம் தொலைவான தூரத்தில் கேட்டுகொண்டிருந்தது. முன்பக்கம் ஊர் தெரிந்தது. தொலைவான காட்சிதான். சிலரது வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் ஊரை அடையாளம் காட்டியது. வித்தியாசமாக இருந்தது. மாலை 6 மணிக்கு அடையாளம் தெரியாமல் போகும் ஊர் இன்று 11 மணி வரை வெளிச்சம் பூண்டிருந்தது. இன்று ஆவியின் நடமாட்டம் இருக்குமா? வராமல் போனால் என்ன செய்வது? எப்படி ரேஷ்மாவை கண்டுபிடிப்பது? மாறி மாறி கேள்விகள் வினய்யின் எண்ணக்கூட்டில். அது வரும் வரை காத்திருப்பது என்று முடிவு செய்து அமர்ந்தனர். ரத்தன் ஊரில் இருக்கிறானா? வீட்டில் அவன் ஏதும் தென்படுகிறானா? என்று வினய்யும் சுனிலும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்நேரம்.. வீட்டிற்குள் ஒரு ஆள் நடமாடுவது தெரிந்தது. ஆனால் அது ரத்தன் அல்ல. அந்த ஆள் பின்பக்க கதவின் வழியே வெளிப்பட்டான். வெளிச்சமின்மையால் யார் என்பது புலப்படவில்லை. இரண்டு கைகளையும் எடுத்து இடுப்பு மீது வைத்துக்கொண்டு காட்டை நோக்கினான். சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருந்தான். பெருமூச்சு விட்டு திரும்பி கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டான். முன்பக்க கதவை நோக்கி செல்வது ஜன்னல் வழியே தெரிந்தது. அதற்குமேல் ஏதும் தென்படவில்லை. யார் என்பது தெரியவே இல்லை.
வளர்பிறை நிலவு உச்சியைத் தொட்டிருந்தது. வெளிச்சம் காடு முழுவதும் பரவியிருந்தது. ஆத்துவழி பிரகாசமாய் தெரிந்தது. தூரத்தில் ஒரு உருவம். ஆத்துவழியே வந்துகொண்டிருந்தது. ஊருக்கு கிழக்குபுறமிருந்து வந்துகொண்டிருந்தது. கருப்பு உருவம். முழுக்க முழுக்க கருப்பு. கொஞ்சமும் வேறில்லாத மனித உருவம். தலை முதல் கால் வரை எதனாலோ மூடப்பட்டிருந்தது போலிருந்தது. மெதுவாக ஆத்துவழியில் நடந்து வந்துகொண்டிருந்தது.
மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த உருவம் இவர்களை கடந்து சென்று கொண்டிருந்தது. அதனை விடாமல் தொடர மேலிருந்தவாறு இவர்களும் செடிகொடி மரங்களின் ஊடே பின்தொடர்ந்தனர். சற்று தூரம் இவ்வாறு தொடர்ந்துகொண்டிருந்தனர். எந்த மாற்றமும் இல்லை. திடீரென உருவம் சிறிது வேகமெடுத்து நடக்க ஆரம்பித்தது. இவர்களும் வேகமெடுத்தனர். இன்னும் சற்று வேகம் தேவைப்பட்டது. அந்த உருவம் அந்த மணல் பாதையிலும் வேகமாக நடந்தது. இவர்கள் செடிகொடிகளை பொருட்படத்தாமல் இழுத்துத் தள்ளிக்கொண்டு ஓடினர். இவர்கள் கவனம் முழுவதும் அந்தக் கருப்பு உருவத்தை பின் தொடர்வதிலேயே இருந்தது. அதனால் இவர்களை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த இரண்டு உருவங்களை கவனிக்கத் தவறினர். இருட்டில் இந்த உருவங்களை அவர்கள் கவனிக்கவில்லை. ஆனால் அவர்களை பின்தொடர்வதை இந்த உருவங்கள் கவனிக்க தவறவில்லை. வழியின் இருபுறமும் பின்தொடர்ந்து வந்த உருவங்கள் இப்போது ஒன்றிணைந்து இவர்களை பின்தொடர்ந்தன.
திடீரென வினய்யின் பின்சென்ற சுனிலின் இருகால்களையும் பிடித்து இழுத்தன. சுனிலை மிகவும் வேகமாக இழுத்துக்கொண்டு சென்றன. சுனில் உரத்த குரலில் “வினய், வினய்” என்று கத்தினான். அதைக்கேட்டு வினய் திரும்பிப் பார்த்தான். ஆத்துவழியில் சென்றுகொண்டிருந்த அந்த உருவமும் நின்று திரும்பிப்பார்த்தது. சுனிலின் கால்களை அந்த உருவங்கள் இழுத்துச் செல்வதை பார்த்த வினய் கோபம் கொண்டவனாய் எழுந்து ஓடிச்சென்று , வேகமாக ஓடிச்சென்று எகிறி இரு உருவங்களின் மார்பிலும் எட்டி உதைத்தான். அந்த உருவங்கள் அப்படியே பின்பக்கமாக விழுந்து சிறிது தூரம் தள்ளி விழுந்தன. அப்போதுதான் வினய் உணர்ந்தான். அவைகள் பேயோ, பூதமோ இல்லை நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை. வினய் சுனிலை எழுப்பி நிற்க வைத்தான். அந்த இருவரும் கையிலிருந்த தீப்பந்தத்தை கண் இமைப்பதற்குள் பற்றவைத்தனர்.
அவர்கள் தீப்பந்தத்தால் ஓங்கி இவர்களை அடிக்க முற்பட, அதில் ஒருவனின் மார்பில் ஓங்கி வலுவாக ஒரு குத்துவிட்டான், வினய். இன்னொருவனின் காலில் சுனில் தன் காலால் ஓங்கி ஒன்று வைக்க அவன் முட்டியில் ஊன்றினான். வினய் தன் கால்முட்டியால் அவன் காதோடு சேர்த்து ஒன்று விட்டான். அவ்வளவுதான் அவன் பேச்சு மூச்சில்லாமல் சாய்ந்தான். அடுத்தவன் எழுந்து கையில் தீப்பந்தத்தை எடுத்து ஓங்கி இருவரையும் நோக்கி அடித்தான். அது இவர்களை தாண்டிச் சென்று விழுந்தது. அவன் இவர்கள் இருவரையும் நோக்கி ஓடிவந்து அவனது இருகைகளாலும் இவர்கள் இடுப்போடு சேர்த்து பின்நோக்கி தள்ளிக்கொண்டே ஓடினான். சிறிது தூரம்; மூவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மறுபடி எழுந்தனர். இம்முறை இவர்கள் சுதாகரித்துக்கொண்டு அவனை பின்நோக்கி இழுத்துச்சென்றனர். அவன் சற்று அதிகமாகவே அலறினான். இவை அனைத்தையும் கீழே நின்று கொண்டிருந்த உருவம் கவனித்துக்கொண்டிருந்தது. அவனை சிறிது தூரம் அப்படியே இழுத்துக்கொண்டு போயினர்.
அவன் காரணமில்லாமல் அலறித் துடித்தான் மறுபடி நிலைதடுமாறியது. இம்முறை ஏதோ குழி போன்றதில் விழுந்தனர். அவன் தலைகுப்புற விழுந்தான். இவர்கள் நேராக விழுந்துவிட்டனர். சேறும் சகதியும் நிறைந்த புதைகுழி அங்கிருந்ததை இவர்கள் அறிந்திருக்கவில்லை. நன்றாக சிக்கிக்கொண்டனர். அவனோ தலைகுப்புற விழுந்ததில் தலை உள்ளே சொருகிக்கொண்டான். கால்கள் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. வேகமாக வந்து விழுந்ததில் இவர்கள் மார்பளவுக்கு மேலே உள்வாங்கிக் கொண்டது. வினய் சற்று ஓரமாகவே விழுந்திருந்தான். சுனிலோ நடுவில் விழுந்துவிட்டான். இருவரும் கைகளை முன்னும் பின்னுமாக தள்ளிக்கொண்டிருந்தனர். ஓரத்தில் இருந்த வினய் சற்று முன்னேறினான். ஆனால் சுனிலோ உள்வாங்கப்பட்டுக் கொண்டிருந்தான். வினய் சற்று சிரமமெடுத்து தரையைத் தன் கையால் தொட்டுவிட்டான். கையை நீட்டி புற்களை பிடித்துக் கொண்டான். கெட்டியாக பிடித்து உடலை அசைத்து அசைத்து ஒருவழியாக கரையை உடம்போடு ஒட்டினான். மெதுவாக இரு கைகளாலும் புற்களை பிடித்து அப்படியே ஏறினான். மெதுமெதுவாக ஏறி தரையில் படுத்தான். திரும்பி சுனில் விழுந்த இடத்தைப் பார்த்தான்.
‘சுனில்.. சுனில்...’ என்று கூறியபடியே அழுதான்.
சுனில் முழுவதுமாக உள்ளே சென்றுவிட்டான். வினய்யால் எழக்கூட முடியவில்லை. தெம்பற்றவனாய் இருந்தான். அப்போதும் ஆத்துமேட்டில் நின்றிருந்தவன் அங்கேயே நின்றுகொண்டு நடப்பதை பார்த்துக்கொண்டு இருந்தான்.
திடீரென காட்டுக்குள் இருந்து ஒரு சத்தம். பலத்த காற்று; காட்டின் ஒருபக்கத்தில் இருந்து அந்த உருவத்தின் வலது பக்கமாக. அந்த உருவமும் சத்தம் வரும் திசையைப் பார்த்தது.