Get Best Only
பாகம் 18
வினய்யும், சுனிலும் ரேஷ்மாவை மீட்கும் வேகத்தில் நிறைய தூரம் கடந்திருந்தனர். ஆனால் எந்தவொரு தடயமோ, நடமாட்டமோ தென்படவில்லை. மூச்சு வாங்கிக் கொள்ள நின்று திரும்பப் பார்த்தபோது ரத்தன் இல்லை. இவர்களோ ஓடுவதற்கு இனி தெம்பில்லை என்றவாறு முட்டியில் ஊன்றியவாறு இளைப்பாறினர். என்ன செய்வது என்று கேட்பதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
வந்த வழியே சிறிது வேகத்தோடு ஓடினர். மழை நின்றிருந்தது. இவர்களுக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. அப்படியே கீழே சரிந்து அமர்ந்தனர். ரொம்பவே களைப்படைந்திருந்தனர். ஆனால் கோபமும் சேர்ந்திருந்தது.
சுனில், ’இவ்ளோ பெரிய காட்டுல அவங்கள எப்டி கண்டுபிடிக்கிறது? அவ்ங்க எந்தப்பக்கம் போனாங்கனே தெரியலயே’
‘ ‘
‘டேய்! எதாவது சொல்லுடா’
‘அவங்க ரெண்டு பேருக்காக இந்த ரெண்டு உசுரும் போனாலும் பரவால. ஒண்ணு அவங்கள கண்டுபிடிச்சு இதுவரைக்கும் யாரும் கண்டுபிடிக்காத ரகசியத்த கண்டுபிடிச்சவங்கனு பேர் எடுக்கணும். இல்ல இதுவரைக்கும் வந்தவங்கள மாதிரி இவங்களும் செத்துப்போயிட்டாங்கனு பேர் எடுக்கணும். ஆனா பயந்துபோய் திரும்பிப் போனா நாம சாகற வரைக்கும் கோழைங்ககிற பேர்தான் இருக்கும். அதுக்கு செத்துப் போகலாம்’
‘சரி, இப்போ அவங்க எந்தப் பக்கம் போனாங்கனே தெரியலையே. பின்னாடி வந்த ரத்தனையும் காணல. அவன் திரும்பி போய்ட்டானா, இல்ல தூக்கிட்டுப் போயிட்டாங்களானே தெரியலையே’
வினய் திரும்பி சுனிலைப் பார்த்தான்.
‘இப்போ டைம் என்ன ஆச்சி?’
‘9:45’
‘ஒண்ணும் கெட்டுப் போகல. நேரா அந்த ஆத்துவழிக்கு பக்கத்துல போவோம். அங்க அந்த ஆவி போகும்ல. அத ஃபாலோ பண்ணுவோம். ஏதாவது க்ளூ கிடைக்கும். நமக்கு இருக்குற ஒரே ஆப்ஷன் அதுதான்’
‘இதுங்க மனுஷங்க இல்ல. ஆவி.. பேய். அதுங்கள எதிர்த்து நம்மளால என்ன பண்ண முடியும்?’
‘இதுங்க ஆவிங்க இல்லாம இருந்தா? இந்தக் காட்ல வேற எதோ மர்மம் இருக்கு. அதுக்குதான் இதெல்லாம் நடக்குதுனு எனக்குத் தோணுது. நெறய யோசிச்சிட்டேன். நெறைய பேசிட்டோம். இறங்குவோம். வர்றத பாத்துக்கலாம்’
சுனில் சரி என்பது போல் தலையாட்டினான். இவர்களை தூரத்தில் நின்று இரண்டு உருவங்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அதை இவர்கள் கவனிக்காமல் எழுந்து ஆத்துவழி நோக்கி நடந்தனர்.