Get Best Only
பாகம் 17
திறந்த நிலையில் இருந்த பின்கதவின் வழியே வெளியே சென்று பார்த்தனர். தெற்கே இடி மின்னலை உமிழ்ந்துகொண்டிருந்தது வானம் மலைகளின் மீது. மிகத் தெளிவான காட்சி. நான்கு உருவங்கள் நகர்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. மிகத்தூரன் என்று சொல்ல முடியாத தூரம். அது அவர்களா? இல்லை அவைகளா? என்ற அச்சமும் தொற்றிக்கொண்டிருந்தது இவர்களிடத்தில். என்னவானாலும் அவளை காப்பாற்றுவதென்று முடிவெடுத்தனர். ஊர்க்கட்டுப்பாட்டை மறந்து போனவர்களாய் பின்தொடர எத்தனித்தனர். அடுத்த கணம் உருவங்கள் மறைந்து போயின.
இவர்கள் மூவரும் வயல்வெளிகளின் வழியே ஓடினர். மிகக்குறுகலான வரப்புகள். இவர்களின் வேகம் சற்று உயரத் தொடங்கியது. இன்னும் வேகமெடுத்தனர். உருவங்கள் மறைந்த இடத்தை நெருங்கியிருந்தனர். பக்கத்தில் காடு.. இவர்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒரு வழி போன்று அந்த காட்டை நோக்கிச் சென்றது. அதனூடே நடந்தனர். காட்டுக்குள் நுழைந்தனர். ஓட்டமும் நடையுமாக சென்றுகொண்டிருந்தனர். ஆனால் எந்தவொரு காட்சியும் அவர்களுக்கு புலப்படவில்லை. மழை வேகமெடுத்தது. மூவரும் ஒன்றாகவே சென்றனர். காட்டின் உள்ளே நேர்வழியில் சென்றுகொண்டிருந்தனர். நீர் ஓடி ஏற்படுத்திய வழிகளின் வழியே வேகமெடுத்து சென்றனர்.
‘ரேஷ்மா’
‘ரேஷ்மா..’
‘ரேஷ்மா....’
பதில் எதுவும் இல்லை. ஒருவேளை அவள் மயக்கநிலையில் இருக்கலாம். முன்னோக்கி செல்வதை மட்டுமே குறிக்கோளாய் கொன்டிருந்தனர். ஓடிய வேகத்தில் ரத்தன் ஒரு மரத்தின் வேரில் கால் மாட்டிக் கொண்டதாய் உணர்ந்து அப்படியே பின்னோக்கி இழுக்கப்பட்டான். தலைக்குப்புற விழுந்தான். அதை கவனிக்காத வினய்யும், சுனிலும் முன்னோக்கி செல்வதில் சிறிது தூரமாகவே சென்று விட்டனர்.ஆனால் ரத்தன் விழுந்த வேகத்தில் தன்னிலை இழந்தவனாய் கிடந்தான். கால் எதில் மாட்டிக்கொண்டது என பார்த்தபோது அது ஒரு கொடி. வலையாக விரிக்கப்பட்ட கொடி. யார் வலையில் விழுந்துவிட்டோம்? என் நினைத்த நொடி மரத்தின் பின்னே இருந்து இரு உருவங்கள் வெளிவந்தன. அவன் விழுந்து கிடந்ததில் அவை பார்க்க மிகப் பிரமாண்டமாய் காட்சியளித்தது. அவனை நெருங்கின. வலதுபுறம் ஒன்றும், இடதுபுறம் ஒன்றுமாய் நின்றன. மயங்கிப் போனான்.