Get Best Only
பாகம் 16
நிலைதடுமாறி கீழே விழுந்த பூசாரியை அருகில் இருந்தவர்கள் தூக்கி நிப்பாட்டினர். அந்தப் பெண்ணின் முன்னால் அந்த ஆண் குனிந்தவாறு நின்றான். சாமி வந்த அந்தப்பெண்ணோ ஒரு புரியாத பாஷையில் கோவமாக அந்த ஆணை ஏதோ திட்டி அடக்குவதுபோல் மிகுந்த ஆவேசத்தோடு கத்திக் கொண்டிருந்தாள். தாயைக் கண்ட சேனையாக அந்த ஆண் அந்தப் பெண்ணின் அருகில் மண்டியிட்டான். அந்த ஆணையே சிறிதுநேரம் முறைத்துக்கொண்டிருந்தாள் அந்தப் பெண். மறுபடி பூசாரியைப் பார்த்து சிறிது கண்கலங்கினார்.
பூசாரி, ’அம்மா, ஏம்மா அழற, இப்டி பண்ணுனது யாரும்மா? சொல்லுமா’
ஆனால் அந்தப்பெண்ணோ ஏதும் சொல்லாமல் சற்று கோவத்தோடு அழுதுகொண்டிருந்தாள்.
ஊர்மக்களில் சிலர்,’அம்மா, சொல்லுமா, சொல்லுமா’ என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் எந்தப் பதிலும் இல்லை.
இறுதியாக,
‘உங்க படையல நான் ஏத்துக்கிட்டேன். நாளைக்கும் வழக்கம்போல் செய்யுறத செய்யுங்க’னு சொல்லிட்டு அப்படியே சரிந்தாள்.அருகில் இருந்த பெண்கள் அப்படியே அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டனர். அருகில் மண்டியிட்டு இருந்த ஆணும் அப்படியே சரிந்தான். பூசாரி இருவரது நெற்றியிலும் விபூதியிட்டார். குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். பூசாரி முதல் அனவர் முகத்திலும் குழப்பம். இப்படி ஆகிவிட்டதே என்று அனைவரும் நொந்து கொண்டனர்.
படையலை முடித்துக்கொள்ளும் விதமாக பூசாரி அம்மனுக்கு தீபாராதனை காண்பித்தார். அனைவரிடத்திலும் தீபத்தை கொண்டுவந்தார். அனைவரும் கற்பூற தீபத்தை வணங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் ரேஷ்மா இல்லை என்பதை மூவரும் உணர்ந்தனர்.
“ரேஷ்மா”
“ரேஷ்மா..”
“ரேஷ்மா....”
அவள் வீட்டில் பாயில் களைத்தவளைப் போல் படுத்துக்கிடந்தாள். கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசனை செய்ய முற்பட்டவளாய் இருந்தாள். ஏன் இந்த களைப்பு என்பதை அறியாதவளாய் படுத்துக் கிடந்தாள்.
ஜன்னல் வழியே இடி மின்னலும் மிரட்டும் வானம். இருட்டை விரட்ட முயன்று தோற்றுப்போய் மீண்டும் மீண்டும் மின்னிக் கொண்டிருந்தது. அப்போது-
ஒரு கருப்பு உருவம்.. வீட்டிற்கு மிக அருகாமையில்.. ஒன்றல்ல, நான்கு ஐந்தாய் தெரிகிறது. ஒன்றன்பின் ஒன்றாக வீட்டின் பின்பக்க கதவை நோக்கி நகர்ந்தன. கதவை மெதுவாக எந்தவொரு சப்தமுமின்றி திறந்தது. ஏதும் அறியாதவளாய் ரேஷ்மா படுத்துக்கிடந்தாள். கண் திறந்தவளின் எதிரே கருப்பு உருவங்கள். சப்தமிட முடியாதபடி அவளை அணைத்தன. அடுத்த சில நிமிடங்கள் கழித்து.. வினய், சுனில், ரத்தன் மூவரும் முன்கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தனர்.
கசங்கிய பாய், திறந்தநிலையில் பின்கதவு, எரிந்த நிலையில் விளக்கு.. ரேஷ்மாவைக் காணவில்லை. மூவரும் அதிர்ந்து போயினர். அப்படியே உறைந்துபோய் நின்றனர்.