Get Best Only
பாகம் 2
இப்படியே ஒரு வாரம் செல்ல மாலை ஆறு மணி ஆனாலே அனைவரும் வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொள்வர். விதை விதைப்பது முதல் அறுவடை வரை அனைத்தும் பகலிலே செய்தனர். இரவு வயல் காவலுக்குக் கூட யாரும் செல்வதில்லை. மாணிக்கமும், அவனது அம்மா மட்டும் எந்த வேலையும் செய்வதிலலை. சரியாக சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. இறந்துபோன தன் கணவரை பற்றிய கவலை மனதையும் உடலையும் வருத்தியது. அதனால் மாணிக்கத்தின் தாயார் ஒரு முடிவுக்கு வந்தாள். ஊரை விட்டு காலி செய்வது என்று முடிவெடுத்தாள். கையில் இருந்த கொஞ்சம் காசை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்பிவிடலாம் என்று எண்ணினாள்.
மாணிக்கத்திடம், ’இந்த ஊர்ல இனிமே நாம இருக்கக் கூடாது. இந்த ஊர் உங்கப்பாவ கொன்னுடிச்சி. இந்த ஊர் ஜனங்களும் நமக்கு உதவியா இருக்க மாட்டாங்க. இனிமே இது நம்ம ஊர் இல்ல. இனி நாம இங்க இருக்கவும் கூடாது. இங்க வரவும் கூடாது. கெளம்பு, உன்ன நல்லா படிக்க வைக்கணும்னு அப்பா ஆசப்பட்டாரு. அது நடக்கணும். வேற ஊருக்குப் போய் பொழச்சிக்கலாம்’ என்றாள். யாருக்கும் சொல்லாமல் காலையில் கிளம்புவது என்று முடிவெடுத்தாள். மாணிக்கமும் அதற்கு சம்மதித்தான்.
மாணிக்கத்தை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் வந்தாள் அவளது அம்மா. யாரும் 6 மணிக்கு முன் வீட்டை விட்டு வெளியில் வர மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தாள் அவள். கோயிலைத் தொட்டு ஊரை விட்டு வெளிச் செல்லும் பாதையில் நடந்தனர் இருவரும். மாணிக்கம் இறுதியாக பிறந்த ஊரைப் பார்த்துக் கொண்டான். இருவரும் நடந்தே பக்கத்தில் இருக்கும் டவுனான செஞ்சிக்குச் சென்றனர். அங்கிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி சென்னைக்குச் சென்று சேர்ந்தாள்.
மாணிக்கத்தின் வீடு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஊர் மக்கள் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானித்தனர். சரி போனவர்கள் போகட்டும் என்கிற போக்கில் ஊர் மக்களும், பெரியவர்களும் விட்டுவிட்டனர். சில வாரங்களுக்குப் பிறகு ஊரின் முக்கூட்டில் ஒரு பிணம் கிடந்தது. அது அதே ஊர்க்காரரின் பிணம். இப்படியாக மர்மமான முறையில் சிலர் இறக்க ஊர்மக்கள் செய்வதறியாது திகைத்தனர். சிலரோ மாய மந்திரங்களை செய்தனர். சிலர் ஊரை காலி செய்து விடலாம் என்று யோசனை கூறினர். நாளாக, நாளாக கொலைகள் அதிகமாயின. காரணமும் தெரியவில்லை. சில நாட்களில் ஊரில் இருப்பவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக ஊரை காலி செய்துவிட்டு கிளம்பினர். அதுவே தொடர்ந்தது. ஊரை காலி செய்தவர்கள், திரும்ப வரவும் இல்லை. எங்கே சென்றார்கள் என்பதும் தெரியவில்லை.
No comments:
Post a Comment